பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்களை போலீசார் கைது செய்த நிலையில் இன்று அவர் தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மாதம் அம்ரித்பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்த சூழலில் பதற்றத்தை தவிர்க்க அம்ரித்பால் சிங் உதவியாளரை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய தீவிர சோதனையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 78 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதால், அதிகாரிகள் பல இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, மாநிலத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை இன்று மதியம் வரை நிறுத்தி வைத்திருந்தனர்.








