ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய பாதுகாப்பு படை தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை அதிகரித்தது. இச்சூழலில் கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரயில்களை வடமேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் என முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








