ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் பணியில் தேர்வான 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்த அரசு எடுத்த முயற்சியின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றார்.
உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட பணவீக்கம், வேலை வாய்ப்பின்மையால் திணறி வருகிற நிலையில், இந்திய முழு பலத்துடன் புதிய முயற்சிகள் மற்றும் சில அபாயங்களுடன் உலகளாவிய நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முயற்சிக்கிறது என தெரிவித்தார்.
சுயசார்பு இந்தியா என்ற பாதையை நோக்கி நடை போடுகிறோம். உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் இந்தியா அதனை சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.








