வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று நவம்பர் 15-ஆம் தேதி அதிகாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவம்பர் 15-ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்தது. இது இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கே 630 கி.மீ., அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து மேற்கு-தென்மேற்கே 690 கி.மீ., சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
‘அக்வான்’ புயலாக வலுப்பெற வாய்ப்பு!
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 15-ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் நவம்பர் 17-ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக மாறக்கூடும். அதன்பிறகு மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை நோக்கிச் செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஈரான் வழங்கியுள்ள ‘அக்வான்’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை!
இதற்கிடையே, தமிழகத்தில் இன்று (நவம்பர் 15) இரவு 10 மணி வரை மழைக்கான முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




