“இந்தியா – எகிப்து வர்த்தகத்திற்கு எல்லையே இல்லை!” – பியூஷ் கோயல்!

இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா – எகிப்து நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இருதரப்பு வர்த்தகம், சேவைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கவும் புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். எகிப்தில் உள்ள இந்திய சமூக அமைப்பான Indian Community Association in Egypt (ICAE) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தற்போதைய வர்த்தக அளவு போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் பொருளாதார வலிமையைக் கருத்தில் கொள்ளும்போது, தற்போதைய வர்த்தகம் ஒரு தொடக்க நிலை மட்டுமே என்றும், எதிர்கால வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வர்த்தகம், முதலீடுகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா தனது பொருட்களை எகிப்து சந்தையில் விற்பனை செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், எகிப்தின் பொருட்கள் மற்றும் முதலீடுகளையும் இந்தியாவுக்குக் கொண்டுவர விரும்புவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். இரு நாடுகளும் தங்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்றும், இரு தரப்புக்கும் சமமான பலன்களை அளிக்கும் வகையில் வர்த்தகம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எகிப்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளை அந்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்துவது, எகிப்தின் வலிமை வாய்ந்த துறைகளில் இருந்து பொருட்கள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.

6.5 பில்லியன் டாலராக இருதரப்பு வர்த்தகம்!

2025-26-ஆம் நிதியாண்டின் வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, இந்தியா எகிப்துக்கு 3.87 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதே காலகட்டத்தில் எகிப்தில் இருந்து இந்தியா 2.60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் இறைச்சி மற்றும் கோழிப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள், பருத்தி மற்றும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், எகிப்தில் இருந்து இந்தியா கச்சா பெட்ரோலியம், உரங்கள், பருத்தி மற்றும் கனிமப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு அளவு இன்னும் குறைவாகவே உள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில், எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு (FDI) வெறும் 11.5 மில்லியன் டாலர் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

132 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் எகிப்தில் பியூஷ் கோயல்!

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 132 பேர் கொண்ட இந்திய வர்த்தகக் குழுவுடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார். எகிப்து நாட்டின் தலைவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

மேலும், இந்திய மற்றும் எகிப்திய நிறுவனங்கள் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை எளிதாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ICAE அமைப்பு இரு நாடுகளுக்கான புதிய வர்த்தக வழிகாட்டியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். இதனைப் பண்டைய காலக் கடல் வழிகள் மற்றும் வர்த்தகத் துறைமுகங்கள் குறித்த வழிகாட்டி நூலான ‘Periplus’ உடன் ஒப்பிட்டு, வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டியை உருவாக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

உலக நாடுகளுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தும் இந்தியா!

இந்தியாவின் சர்வதேச வர்த்தகக் கொள்கை குறித்துப் பேசிய பியூஷ் கோயல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச வர்த்தகத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உலகச் சந்தைகளில் முன்னுரிமை அடிப்படையிலான அணுகலைப் பெற்றுத் தருவதற்காக, நட்பு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements – FTA) விரிவுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு (EFTA), நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

கனடா, சிலி, தென்னாப்பிரிக்கா தலைமையிலான தென்னாப்பிரிக்க சுங்க ஒன்றியம் (SACU), பிரேசில் தலைமையிலான மெர்கோசூர் (Mercosur) மற்றும் ரஷ்யா தலைமையிலான யூரேசிய பொருளாதார ஒன்றியம் (EAEU) ஆகியவற்றுடனும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் மூலம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 115 டிரில்லியன் டாலரில், சுமார் 85 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தைக் கொண்ட சந்தைகளில் இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா – எகிப்து இடையிலான வர்த்தகத்தை மட்டுமின்றி, உலக நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.