அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று தவெக தலைவர் விஜயின் அரசு மீது தமிழ் நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச்செயலாளராக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அரசியல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அப்படி வருகின்ற சூழலில், ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்…? இது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு மத்தியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை மதித்து முதல்வர் விஜய் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்கிறது. நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” கூறினார்.







