10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி: ரஷ்யா

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு தங்கள் நாட்டு பெண்களை கேட்டுக்கொண்டுள்ள ரஷ்யா, 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நிலப்பரப்பில் உலகின் முதல் பெரிய நாடான ரஷ்யா, மக்கள் தொகையில்…

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு தங்கள் நாட்டு பெண்களை கேட்டுக்கொண்டுள்ள ரஷ்யா, 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

நிலப்பரப்பில் உலகின் முதல் பெரிய நாடான ரஷ்யா, மக்கள் தொகையில் உலகில் 9வது இடத்தில் உள்ளது. தற்போது அந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 14.50 கோடி.

ரஷ்யாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த வீழ்ச்சி அதிகரித்து காணப்படுவதாகவும் அந்நாட்டு அரசு கூறி உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு பெண்களை கேட்டுக்கொண்டுள்ளார். 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு 10 லட்சம் ரூபிள்ஸ் (ரூ.13 லட்சம்) வெகுமதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

10வது குழந்தை பிறந்து ஓராண்டு ஆன பிறகு இந்த தொகை வழங்கப்படும் என்றும் இதற்குத் தகுதி பெறும் பெண்ணுக்கு வெகுமதியோடு மதர் ஹீரோயின் எனும் பட்டமும் வழங்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக அளவில் உயிரிழந்ததை அடுத்து, மதர் ஹீரோயின் திட்டத்தை அப்போதைய ஆட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் சோவியத் யூனியன் உடையும் வரை அதாவது 1991 வரை அமலில் இருந்தது. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பட்டத்தை பெற்றனர். அதன் பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.