அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், ஹெச்1பி நுழைவு விசா வழங்கும் நடைமுறைக்கு மாற்றாக புதிய முறை அமல்படுத்தப்படும் என குடியரசுக் கட்சியின் போட்டியாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் களம் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு விசாவை பெறுவதற்கான தற்போதைய நடைமுறைக்கு விவேக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ”லாட்டரி முறையைப் போன்றே ஹெச்1பி நுழைவு விசா நடைமுறை உள்ளது. அந்த நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக, திறமையை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் தேவைக்கு ஏற்ப திறன்மிக்க வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நுழைவுஇசைவு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
ஹெச்1பி விசா நடைமுறைக்கு எதிராக விவேக் ராமசாமி கருத்து தெரிவிப்பது இரண்டு நாள்களில் இது 2ஆவது முறையாகும். முன்னதாக, மற்றொரு செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், ‘‘ஹெச்1பி நுழைவுவிசா நடைமுறை சரிவர இல்லை. பணியாளர்களின் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரான பிறகு, ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’’ என தெரிவித்தார்.