தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலும், ஜீவாவும் நண்பர்கள் என்பது திரையுலகத்தினர் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஜீவாவின் தந்தை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் சென்னை தி.நகர் துணை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.
விஷால் தயாரித்த படங்களுக்காக பல லட்சங்களை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் வாங்கியுள்ளார். ப்ரோநோட் மூலமாக பணத்தைப் பெற்று திரும்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் விஷால் கையெழுத்திட்ட ப்ரோநோட்டை திருப்பித் தராமல் மோசடி செய்வதாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விஷால் தரப்பில், “ஏற்கனவே ஆம்பள திரைப்படத்திற்கு கோத்தாரி என்ற பைனான்சியரிடம் விஷால் ப்ரோநோட் அடிப்படையில் பணம் வாங்கினார். நம்பிக்கையின் அடிப்படையில் புரோநோட்டை திரும்ப வாங்காததால் அதை பயன்படுத்தி ஆம்பள படத்தை வெளியிட தடை கோரி சட்டபூர்வமான நடவடிக்கையை கோத்தாரி மோசடியாக எடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்றே ஆர்.பி.செளத்ரியும் புரோநோட் தொலைந்து விட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் தனக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது என புகார் அளித்துள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







