சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஆலையின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால் பட்டாசு ஆளையில் பத்து நாட்களாக எவ்வித பணியும் நடைபெறவில்லை.
பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளான சல்பர் அதிகளவில் ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு மற்ற அறைகளுக்கு பரவியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெடி விபத்து ஏற்பட்ட மூன்று அறைகளும் வெடித்து சிதறி தரைமட்டமானது. இதனை அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். பட்டாசு தொழிற்சாலையில் பணிகள் ஏதும் நடைபெறாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.