ராஜபாளையத்தை அடுத்த சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கியும்,அக்னிசட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21 -ம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. சுமார் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும்,சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன.மேலும் அம்மன் ரிஷப வாகனம்,பூப்பலக்கு என பல விதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். எலுமிச்சை அலங்காரம், வேப்பிலை அலங்காரம் பல விதமாக அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசிக்க தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
விழாவின் சிகர நாளான பூக்குழி இறங்கும் நிகழ்வு அதிகாலை 2 மணியளவில் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை மனமுருக வேண்டி
பூக்குழியில் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் அக்னிசட்டி எடுத்தும் ஆயிரம்கண்பானை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்.
அலங்கரிக்கப்பட பூச்சப்பரத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.அம்மனை தரிசிக்க நகரெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். வில்லுப்பாட்டு, ஆடல்பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
—-வேந்தன்







