தன் பழைய உரிமையாளர் மீது கொண்டிருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக, கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று புதிய உரிமையாளர் வீட்டிலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்தை 27 நாட்கள் நடந்தே சென்று கடந்து தனது பழைய உரிமையாளரை சந்தித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நம்முடன் மிக நெருக்கமாகவும், அதே சமயம் எளிதாக ஒன்றிப்போகக்கூடிய விலங்கு என்றால் அது நிச்சயம் நாயாக மட்டும்தான் இருக்க முடியும். இதில் வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் சரி, நம் தெரு ஓரங்களில் திரிகின்ற நாயாக இருந்தாலும் சரி ஒரு முறை அதன் மீது கரிசனம் காட்டி அன்பு செலுத்தினால் போதும், காலம் முழுக்க நம் மீது அன்பு காட்டக்கூடிய ஜீவனாக நாய் நிச்சயம் இருக்கும். அந்த வகையில், அயர்லாந்த் நாட்டிலுள்ள டன்கனன் என்ற இடத்தில் கூப்பர் என்ற பெயர் கொண்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று தன் பழைய உரிமையாளர்கள் மீது கொண்டிருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக, புதிய உரிமையாளர் வீட்டிலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்தை 27 நாட்கள் நடந்தே சென்று கடந்து தனது பழைய உரிமையாளரை சந்தித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏ்பரல் 22ம் தேதி அன்று கூப்பர் புதிய உரிமையாளர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது, காரை விட்டு இறங்கிய உடனேயே தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிலர் கூப்பர் பழைய உரிமையாளரை காண அவர்கள் வீட்டை நோக்கி சென்றிருக்கலாம் என கூற, தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் நாயை தேட துவங்கியுள்ளனர். இந்த சமயம் கூப்பரோ பரபரப்பான, வாகனங்கள் நிறைந்த
சாலைகளையும், பல ஆபத்தான வழிகளையும் தனியாகவே கடந்து பயணித்து வந்ததோடு, இரவு நேரத்திலும் தனது பயணத்தினை விடாமல் தொடர்ந்து எந்தவொரு உதவியும் இல்லாமல், தனது மோப்ப சக்தியை மட்டுமே உறுதியாக நம்பி புத்திசாலித்தனமாக தனது பழைய உரிமையாளரின் வீட்டை கண்டுபிடிக்க முயற்சித்து வந்துள்ளது.
இதனிடையே, காணாமல் போன நாயை கண்டுபிடிக்க போஸ்டர்கள், சமூக வலைத்தளங்களில் தகவல்களுடன் கூடிய புகைப்படங்கள் பகிரப்பட்டும், ஒரு மாதகாலமாக நாயை கண்டுபிடிக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வந்துள்ளனர். இந்த நேரத்தில் தான் பழைய உரிமையாளரின் வீட்டின் அருகில் கூப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தன் மீது கொண்ட அன்பினால் தான் கூப்பர் தன் வீட்டை அடைய இத்தகைய செயல் செய்துள்ளது என்பதை பழைய உரிமையாளர் தெரிந்துக் கொண்ட பிறகும். தற்போது கூப்பரை அவரால் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால், புதிய உரிமையாளர் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கும் படியான பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









