லஞ்சப்புகாரில் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வட்டாட்சியர் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.45 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாச்சியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரிடம் பட்டா மாறுதலுக்காக வந்திருந்த தேவகோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத கருப்பையா லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்படி ரூ.1 லட்சத்தை தென்னரசுவிடம் லஞ்சமாக கொடுத்த போது கையும், களவுமாக பிடிப்பட்டார்.
இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட தென்னரசுவின் இல்லத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவருடைய இல்லத்தில் 45,73,500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த பணம் தென்னரசுவின் சமீபத்திய சொத்து ஒன்றை விற்றதால் வந்த பணம் என அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
வேந்தன்







