சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வந்தது. இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பியபோது, மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது பற்றிய தீயானது மளமளவென்று அடுத்துள்ள 6 அறைகளுக்கும் பரவியது. இதில் பணியில் இருந்த 11 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமுற்ற 34 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அங்கு விரைந்து வந்த, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்தில், மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் பார்வையிட்டு, வெடிவிபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, போர்மேன், குத்தகைதாரர் ஆகிய 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இந்த விபத்து குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படும், என பிரதமர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும், எனவும் அறிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.