சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விராட் கோலி வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேற, அடுத்ததாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இறங்கினர். அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே-யாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 24.1 ஓவரிலிருந்து ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கி விளையாடினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல்100 பந்துகளில் சதமடித்து அசத்த, விராட் கோலியும் சதமடித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் கோலி சேர்த்த ரன்களின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். இதில் 47 சதங்கள், 66 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 112முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்தும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்டில் 29 சதங்களும் டி20யில் 1 சதத்தினையும் ஒருநாள் போட்டிகளில் 47சதங்களும் அடித்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் அடித்த சதத்தை சேர்த்து, இது 77வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து 4வது முறையாக சதம் அடித்துள்ளதும் கூடுதல் தகவல்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.







