வன்முறை எதிரொலி – மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைப்பு!!

மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,…

மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, குக்கி மற்றும் மேய்தி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், நடைபெற்று அது கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த இனக்கலவரத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணை நிச்சயம் நேர்மையான, நியாயமான விசாரணையாக இருக்கும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி 2023 : இறுதிப் போட்டியில் இந்தியா!!

அதன்படி மணிப்பூரில் அம்மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மேலும், முன்னாள் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளையும் இந்த குழுவில் இணைத்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடையே சுமூகமான உறவையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதே இந்த அமைதிக் குழுவின் பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.