விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பகுதியில் கஞ்சா குற்றவாளியுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்பட எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள வெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய். இவர் கடந்த 17ம் தேதியன்று இரவில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு ஏற்கனவே இரு முறை கஞ்சா வழக்கில் கைதான சூர்யா என்பவர் கேக் ஊட்டியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய், குணசேகரன், சரவணன், பிரகாஷ், விக்னேஷ், சத்தியமூர்த்தி, ராமு வசந்த் ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கஞ்சா குற்றவாளி சூர்யாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-வேந்தன்







