விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

விழுப்புரம் கள்ளச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி…

விழுப்புரம் கள்ளச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர்.  அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம்,  மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில்  சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று பகல் 12மணி அளவில் 9 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த விவகாரத்தில் கள்ள சாராய வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உறுதியளித்துள்ளார்.

கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக  விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Imageகள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் (63) உயிரிழந்துள்ளார்.  இதன் மூலம் பலி  எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.