சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில்,
60 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் கண்ட கனவு நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.
சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்திருந்த நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி நினைவு சின்னத்தை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், எல்விஎம்3 எம்4 ராக்கெட், சந்திரயான்3 விண்கலத்தை சரியான சுற்று வட்டப்பாதையில் கொண்டு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்., சந்திரயான் -3 விண்கலம் நல்லபடியாக செயல்படுகிறது எனவும், திட்டமிட்டப்படி சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் நிலவில் தரையிறங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 60 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் கண்ட கனவு நிறைவேறியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சந்திராயன்-3 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்றும் கூறினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல் எனக்குறிப்பிட்டுள்ளார். “விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாகவும், இதற்காக அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









