கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குற்றவியல் தண்டனை பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மாநில பட்ஜெட் தாக்கல் செய்யும்போது,அப்போதைய நிதியமைச்சர் மறைந்த கே.எம்.மணியை எதிர்த்து எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கூட்டணி அமளியில் ஈடுபட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது. இது அப்போது பரபரப்பாக பேசப் பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக ஆறு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அந்த ஆறு எம்.எல்.ஏக்களும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. இதையடுத்து பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததும் வழக்கை வாபஸ் பெற முயற்சி செய்தது. ஆனால், அதை கேரள உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் அரசியலமைப்பு வரம்புகளை மீறியுள்ளது என்று கடுமையாகச் சாடியது. எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய பதவி என்பது எந்தவிதமான தடையும் இல்லாமல், எதற்கும் பயப்படாமல் அவையில் தங்களுக்கான பொதுப் பணியை செய்வதற்காக தானே தவிர, இதுபோன்ற கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.