தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக திமுகவை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “எங்களுக்கு சிறை என்பது புதிதில்லை. சர்வாதிகார போக்கோடு பேச்சுரிமை பறிக்கும் வகையில் சகோதரர் விஜய் ஆட்சி உள்ளது. கடுமையான சட்டங்களை பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டும். சர்வாதிகார போக்கோடு ஆட்சியை நடத்தலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் பல்வேறு சிறையில் இருந்த தலைவர்களை பற்றி படித்திருக்கிறோம்.
வாய் பூட்டு சட்டம் போட்ட தேவர் பற்றி படித்திருக்கிறேன். இரும்பு உள்ளம் கொண்ட விளாத்திகுளம் மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவு வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. கருத்து உரிமையே பேசும் சட்டமன்ற உறுப்பினர் எந்தவித காரணம் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காவிரி உழவர் பிரச்சனை நாடு முழுவதும் அல்லல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக கடுமையான விளைவுகளை சந்தித்தார்கள் நம்முடைய தலைவர்கள். ரீல்ஸ் ஆட்சியும் சினிமா கொடுமையும் கண்டித்து உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு போராட தயாராக இருக்கிறோம். சிறைக் கதவுகளின் கம்பிகள் எங்களை ஓடித்து விட முடியாது நிமிர்ந்து நிற்கிறோம்.
எங்களை அடக்கி ஒடுக்கினால் சட்டமன்றத்தில் பேசமாட்டோம் என நினைக்கிறார். மிக கடுமையான எதிர்ப்பை கொடுப்போம். எங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றுவோம். சட்டமன்ற கதவை முதல்வர் மூடுவேன் என்று கூறுகிறார். நாட்டின் சட்டத்தையே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு. வார்த்தைகள் பருமனாக பல்வேறு காரணங்கள் உள்ளது. முதலமைச்சர் ரீல்ஸ் முதலமைச்சராக இருக்கிறார். ரியல் முதல்வராக இருக்க கற்றுக் கொண்டால் எல்லாம் நன்றாக இருக்கும். சட்டமன்றத்தில் கலந்து கொள்ளலாம். அதிகமாக அவரைப் பற்றி பேசக்கூடாது எனக் கூறியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் கலந்து கொள்ளும் பொழுது நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட வேணாம் என கூறி இருக்கிறார்கள். சிறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.




