கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (62), சுரேஷ் (61) ஆகிய அண்ணன் – தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக்கு திதி கொடுக்கும் சடங்கிற்காக இன்று மதியம் 1 மணியளவில் நெரூர் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது காவிரி ஆற்றில் இறங்கி திதி சடங்கில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீர் குறைவாக இருந்ததால் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருணன், சுரேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆற்றில் மூவரும் மிதந்து கிடப்பதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கவனித்து, உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




