இந்தியாவின் இன்றைய விண்வெளி சாதனைகளுக்கு வித்திட்டவர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் குருநாதர். தனது மரணத்திற்கு முன்பு கூட, ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து கடைசியாக அப்துல் கலாமுடன் தொலைபேசியில் பேசியவர். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை விண்வெளி ஆராய்ச்சிக்காகவே செலவிட்ட தொலைநோக்கு சிந்தனையாளர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த விக்ரம் சாராபாய், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே பெரும் தொழில் குழுமமாக விளங்கிய சாராபாய் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற குஜராத் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. படிப்பில் சேர்ந்த அவர், பின்பு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி முனைவர் பட்டம் பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேதாஜியின் ஐஎன்ஏ படையில் பங்காற்றிய கேப்டன் லட்சுமியின் சகோதரியும், கேரளாவை சேர்ந்த பிரபல பரதநாட்டியக் கலைஞருமான மிருணாளினி என்பவரை, 1942-ல் திருமணம் செய்தார். இத்தம்பதியின் மகள் மல்லிகா, பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். மகன் கார்த்திகேயா தந்தையை போலவே அறிவியல் ஆராய்ச்சி துறையில் களமிறங்கினார்.
ஆரம்பத்தில் சிறிது காலம் குடும்பத்திற்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை கவனித்து வந்தார். ORG என சுருக்கமாக அழைக்கப்படும் நாட்டின் முதல் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியவர் விக்ரம் சாராபாய்தான். ஆமதாபாத்தில் இந்திய மேலாண்மை கழகம் அமைய பெரும் நிதி உட்பட, பல்வேறு வகைகளில் உதவினார். பரதநாட்டிய கலைஞரான அவரது மனைவி “தர்ப்பணா” என்ற பெயரில் கலைகளை வளர்ப்பதற்கான மையத்தை நிறுவ உறுதுணையாக இருந்தார் விக்ரம் சாராபாய்.
விண்வெளி மற்றும் அணுமின் உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதற்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர் விக்ரம் சாராபாய். திருவனந்தபுரத்தில் இஸ்ரோ மையம் அமைக்கப்பட்ட போது, இவரது தலைமையிலான குழு, ராக்கெட் ஆய்வுக்காக கடுமையாக உழைத்தது. அப்போது அவரது குழுவில் அப்துல் கலாமும் இடம்பெற்றிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1947-ல் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தை ஆமதாபாத்தில் தொடங்கினார் விக்ரம் சாராபாய். அப்போது, அதற்கு 2 தனியார் கல்வி அறக்கட்டளைகள் மூலம் நிதியுதவி பெற்றுத் தந்தார் விக்ரம் சாராபாய். இந்த மையம் காஸ்மிக் அலைகள் தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டது. பிற்காலத்தில் அணுசக்தி ஆணையத்தின் உதவியின் பேரில், இந்த மையத்தின் ஆராய்ச்சி பிரிவுகள் விரிவடைந்தன.
இஸ்ரோவின் முதல் தலைவராகவும் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் சுமார் 5 ஆயிரம் கிராமங்களில், தொலைக்காட்சி ஒளிபரப்பை விரிவுபடுத்த, நாசா செயற்கைக்கோள் மூலம் சேவை வழங்க ஒப்பந்தம் செய்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். மேலும், மத்திய அரசின் சார்பில் ஹைதராபாத்தில் இந்திய மின்னணு கார்ப்ரேஷன் மற்றும் ஜார்கண்டில் யுரேனியம் கார்ப்ரேஷன் நிறுவுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார்.
அமெரிக்கா, ரஷ்யாவை போல இந்தியாவும் விண்ணில் செயற்கைக்கோள் செலுத்த வேண்டும் என்பது விக்ரம் சாராபாயின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதற்காக தீவிர முயற்சிகளை எடுத்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவச் செய்தார். 1975-ல் அவரது விண்வெளி கனவு நிறைவேறியது. ஆம். ரஷ்ய ஏவுதளத்தில் இருந்து, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா வெற்றிகரமாக ஏவப்பட்டது.
1971 டிசம்பர் 30-ம் தேதி இரவு, திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் பணி முடிந்து மும்பைக்கு புறப்படும் முன்னர், சக விஞ்ஞானியான அப்துல் கலாமிடம் தொலைபேசியில் பேசினார் விக்ரம் சாராபாய். அப்போது எஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பாக அப்துல் கலாமிடம் கலந்துரையாடினார். பின்னர் மும்பைக்கு புறப்பட ஆயத்தமான போது, மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 52 தான். அவர் இந்த மண்ணில் வாழ்ந்த காலம் குறைவென்றாலும், விண்வெளியில் இந்தியா இன்று அசுர வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, சகல விதத்திலும் வேராக இருந்தவர் விக்ரம் சாராபாய் தான்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் விக்ரம் சாராபாயின் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், 1966-ல் பத்ம பூஷணும், 1972-ல் பத்ம விபூஷண் விருதுகளும் வழங்கி கெளரவித்தது மத்திய அரசு. மேலும், திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.