உலகப் பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் வித்யாரம்பம்
என்னும் தமிழ் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை நெல்மணிகளில் குழந்தைகள் எழுதி
வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில்
கல்வி தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப் பெற்ற ஒரே மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது.
ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க
பெற்று ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்ற தலமாக
சொல்லப்படுகிறது. இவ்வாறு சிறப்புமிக்க இக்கோயிலில் நேற்று சரஸ்வதி பூஜை விழா
சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று விஜயதசமி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகா
தீபாரதனை நடைபெற்றது. 
மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொல்லப்படும் வித்யாரம்பம், அதாவது
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக தமிழ் முதல் எழுத்தான அ என்ற
எழுத்தை நெல்மணிகளில் எழுதுவது வழக்கம். அதேபோல் இன்று வெளியூர்,
வெளிமாநிலத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காலை முதலே தங்களது குழந்தைகளை இவ்வாலயத்திற்கு அழைத்து வந்து வித்யாரம்பம் என்ற தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதி வருகின்றனர்.
விஜய தசமியில் மாணவர் சேர்க்கை
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை எழும்பூர் அரசு மாதிரிப் பள்ளியில் ஏராளமான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக வருகை புரிந்தனர். இன்று சேர்க்கை பெறும் குழந்தைகளை இன்முகத்துடன் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கரும்பலகை, எழுதுகோல், இனிப்புகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. அரிசியில் முதல் எழுத்தான “அ”-வை எழுதி சேர்க்கை தொடங்கியது.








