எல்ஐசி ஊழியர்கள் என கூறி பண மோசடி-டெல்லியைச் சேர்ந்த 3 பேர் கைது

எல்.ஐ.சியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பண மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 3 பேரை தேனி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். மோசடி செய்த ரூ. 1.5…

எல்.ஐ.சியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பண மோசடி செய்த
டெல்லியைச் சேர்ந்த 3 பேரை தேனி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
மோசடி செய்த ரூ. 1.5 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (78). இவரது கணவர் 12 வருடங்களுக்கு
முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத
நிலையில் இருக்கும் மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார். இந்த
நிலையில், அவரது மொபைல் எண்ணுக்கு பெண் பேசுவது போல் LIC இல் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசிய நபர் நான் LIC இல் இருந்து பேசுவதாகவும், உங்கள் கணவர் LIC-ல் இன்சூரன்ஸ் போட்டிருந்ததாகவும் அது முடிந்துவிட்டதாகவும் அதற்கான தொகை ரூ.37,041-ஐ ரஞ்சிதத்தின் வங்கி கணக்கில்  வரவு வைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. ரகசிய எண் வந்துள்ளது என்றும் அதை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LIC இல் இருந்துதான் பேசுகிறார்கள் என்று அவர்கள் கூறியதால் அதை நம்பி
அவர்களுக்கு தன்னுடைய செல்போன் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார்.
இதனையடுத்து சில நொடிகளிலேயே ரஞ்சிதம் வங்கி கணக்கிலிருந்து 5 தவணையாக
ரூ.1,49,000-ஐ எடுத்துள்ளனர். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு
இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதம், வங்கிக் கணக்கில் இருந்து
திருடப்பட்ட பணத்தை மீட்டுத் தரக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்
புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி சைபர் கிரைம்
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ்
உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்களின்
வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அரங்கநாயகி
தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெண் பேசுவது போல் ரஞ்சிதம் மொபைல் எண்ணிற்கு பேசிய நபர்
டெல்லியை சேர்ந்த சதாசிவம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேனி சைபர் கிரைம்
போலீஸார் டெல்லி சென்றனர். அங்கு சதாசிவம் என்பவரை கைது செய்து விசாரணை
செய்தனர். விசாரணையில் தன்னுடன் சேர்ந்து வில்சன் குமார் மற்றும் முருகன் ஆகிய
மூவரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து டெல்லி பித்தம்புரா, தேரா காஜிகான், மதராசி ஜூகி ஆகிய இடங்களுக்கு சதாசிவம் என்பவரை அழைத்து சென்று அங்கு வில்சன்குமார் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், வங்கி பாஸ்புக், மோசடி செய்த ரூ.1,49,000 பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கக்கூடும், இதுபோன்று பலரிடம் இவர்கள் மோசடி செய்திருக்க வாய்ப்புள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.