நாடாளுமன்ற நிலைக்குழுவில் கனிமொழி, திருச்சி சிவாவுக்கு பதவி

நாடாளுமன்றத்தின் நிலைகுழுக்களில் தலைவராக இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  உள்துறை மற்றும் தகவல் தொழிநுட்பக் குழுக்களை காங்கிரஸ் இழந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உள்துறைக் குழு தலைவராக இருந்த…

நாடாளுமன்றத்தின் நிலைகுழுக்களில் தலைவராக இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

உள்துறை மற்றும் தகவல் தொழிநுட்பக் குழுக்களை காங்கிரஸ் இழந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உள்துறைக் குழு தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி மாற்றப்பட்டு, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பக் குழுவை இழந்தது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கான நிலைக்குழு ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் இன்னும் காங்கிரஸ் வசமே உள்ளது. நீண்ட நாட்களாக சுகாதரக் குழுத் தலைவராக இருந்த சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் மாற்றப்பட்டு, பாஜக எம்.பி. புபனேஷ்வர் கலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்குழுத் தலைவராக திமுக எம்.பி திருச்சி சிவா தொடர்கிறார். மேலும் எம்.பி கனிமொழி ஊரக வளர்ச்சிக்குழுத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வர்த்தகக் குழுத் தலைவராக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜய்சாய் ரெட்டி போக்குவரத்து சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துக் குழு தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

கல்வி, மகளிர், குழந்தைகள், இளையோர் மற்றும் விளையாட்டுக் குழுக்களுக்கு தலைமை வகித்த வினய் ஷாஸ்திரபுத்தே ஓய்வு பெறுவதையடுத்து பாஜக எம்.பி விவேக் தாக்கூர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆற்றல் குழுத் தலைவராக ஜகதாம்பிகா பாலும், ஊரக வளர்ச்சிக் குழுத் தலைவராக ஜனதா தளத்தின் லலான் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதிப் பந்த்யோபத்யாய் தலைவராக இருந்த ஒரே ஒரு குழுவையும் இழந்ததையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸின் அணுகுமுறைகளே இந்த இழப்பிற்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி தங்களது எம்.பி.க்களின் பெயர்களை முன்வைக்காததால், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் வர்த்தகம் மற்றும் ரசாயன உரங்கள் உட்பட மேலும் இரண்டு குழுக்களின் தலைவர்கள் யாரென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிலைக்குழு விதிமுறைகளின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதை அடுத்து, நிலைக்குழுவில் பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.