விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஆக. 3) வெளியாக உள்ளது.
‘தி கோட்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி திரைப்படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஸன்ஸ் தயாரிக்கிறது. இந் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். ‘தளபதி 69’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு நேற்று (அக். 1) முதல் நாளை (அக். 3) வரை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி, ‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக கேவிஎன் புரொடக்ஸன்ஸ் அதிகாரப்பூர்வமான நேற்று அறிவித்தது. பாபி தியோல் ‘அனிமல்’ படத்தின் மூலம் கவனம் பெற்றார்.
இந்நிலையில், இப் படத்தில் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படக்குழு, “பிரமிக்க வைக்கும் ஜோடியை மீண்டும் பெரிய திரைக்கு கொண்டு வருகிறோம்” என பதிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







