மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளான இன்று காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பின்னர், பள்ளி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
“தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம்நாடு பிரகாசிக்கும். காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன். இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கு அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!
மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது :
“இன்று தூய்மை இந்தியாவின் பத்தாம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கான முக்கிய முயற்சியாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்”
இவ்வாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.







