”விஜய் சேதுபதி ஒரு பயங்கரமான நடிகர், அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” – ஷாருக்கான் நெகிழ்ச்சி!

விஜய்சேதுபதி ஒரு பயங்கரமான நடிகர், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது எனவும், நயன்தாரா ஒரு இனிமையானவர் எனவும் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’…

விஜய்சேதுபதி ஒரு பயங்கரமான நடிகர், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது எனவும், நயன்தாரா ஒரு இனிமையானவர் எனவும் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ட்ரெய்லருக்கு முன்பாக ‘ஜவான்’ படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை (Prevue) படக்குழு வெளியிட்டது. இந்த முன்னோட்டத்தில் ரெய்லரில் உள்ள சில காட்சித் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகும் இத்திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

அவ்வப்போது ட்விட்டரில் #AskSRK என்ற தலைப்பில் ஷாருக்கான் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுண்டு. அந்த வகையில் இன்று ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் ஷாருக்கான்.அப்போது அவரது ரசிகர் ஒருவர் ”அட்லீ உங்கள் மிகப்பெரிய ரசிகர். அவருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று #AskSRK என டேக் செய்திருந்தார். 

அதற்கு ஷாருக்கான் ”அட்லீ மிகவும் கூலான மனிதர். அவரது கடின உழைப்பால் என்னை படத்தில் அழகாக காட்டியுள்ளார். அவருக்கும், ப்ரியாவுக்கும், மீருக்கும் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.” என பதிலளித்திருந்தார்.

மேலும் ஒரு ரசிகர் “விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் உங்கள் அனுபவம் என்ன?” என்று கேட்டு #AskSRK என டேக் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான் “நயன்தாரா மிகவும் இனிமையானவர். அவரிடம் அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் உள்ளது. விஜய்சேதுபதி ஒரு பயங்கரமான நடிகர். உண்மையில் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது” என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.