குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார்.
பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, 2016ம் ஆண்டு முதல் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ரூபானி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் ரூபானி, தமது ராஜினாமா கடிதத்தை, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக பொறுப்பு வழங்கி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் தமது கட்சிப் பணியை தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் ரூபானியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து, விஜய் ரூபானி தரப்பிலோ, பாஜக தரப்பிலோ எந்தவிதமான விளக்கங்களும் அளிக்கப்படவில்லை.
விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்கு பிறகு முதலமைச்சரானார். பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த 6 மாதங்களில் 4 முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உத்தர காண்ட் மாநிலத்தில் 2 முதலமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில், கர்நாடகாவில் எடியூரப்பா மாற்றப்பட்டார். இப்போது விஜய் ரூபானி மாற்றப்பட்டுள்ளார்.








