மன்னிப்பு கேட்க மாட்டேன்!! சட்டப்படி எதிர்கொள்ள தயார்!! – அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்

அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே…

அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் கைக்கடிகாரம் குறித்த பில் மற்றும் தனது வரவு செலவு கணக்கை கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டார். அதில் கேரளாவைச் சார்ந்த  சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரஃபேல் வாட்ச்சை ரூ.3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், DMK FILES என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், திமுக நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுகவினர் கண்டனம் தெரிவித்து, நோட்டீஸ் அனுப்பினர்.

இதையும் படியுங்கள் : விஜய் அரசியல் எண்ட்ரி 2024 (or) 2026? – அடுத்தடுத்த வியூகங்கள்…!

அந்த வகையில், DMK FILES என்ற பெயரில் வெளியிட்ட வீடியோ குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதியும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு அண்ணாமலை அனுப்பியுள்ள பதில் நோட்டீசில், அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள் உண்மையானவை என்று கூறியுள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறவும் மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர். இதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.