தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து மதிய உணவு, மாணவர்களுடன் சந்திப்பு என நடிகர் விஜய் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர் பேசும் வசனங்கள் அரசியல் வருகையை சொல்வதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் களத்துக்கு வந்த ரசிகர்கள், மக்கள் மன்றத்திற்கு அணிவாரியான நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை உற்றுநோக்க வைத்தன. அண்மைக் காலமாக நடைபெற்று வரும் நிர்வாகிகள் தொடர் சந்திப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் அரசியல் வருகையை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசியல் பாதை
சென்னை பனையூர் பங்களாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார் விஜய். அப்போது பல ஆலோசனைகள் நடத்தப்பட்டும் வருகின்றன. குறிப்பாக, தொகுதிவாரியாக புள்ளி விபரங்களை சேகரித்து வரும் மக்கள் இயக்க நிர்வாகளிடம், தீவிர உறுப்பினர் சேர்க்கையும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த நாளை முன்னிட்டு தீரன் சின்னமலை சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். இதையடுத்து இஃப்தார் நோன்பு, நலத்திட்ட உதவிகள் என விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்து நகர்ந்து செல்வது, அவர்களின் அரசியல் பாதையை தெளிவாக காட்டி வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இலவச மதிய உணவு
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்படும். வரும் மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் சந்திப்பு
இந்த அறிவிப்பின் பரபரப்பு ஒருபக்கம் இருக்க, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,500 மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மாவட்ட, தொகுதிவாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் தேர்வு செய்யப்படும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, நன்கு படிக்கும் மாணவர்களையும் பங்கேற்க வைக்க உள்ளனர். அவர்களிடம் விஜய் உரையாடி ஊக்கப்படுத்த உள்ளார். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அல்லது அதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். இதில், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சியில் மாநாடா…?
மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுமா? அல்லது திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஏதாவது ஒரு மாநகரில் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், திருச்சி மாநகரில் அவரது ரசிகர்கள் செய்துள்ள சுவர் விளம்பரங்களில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகரின் நல்லாசியுடன் என்று எழுதி “திருச்சி என்றாலே திருப்புமுனைதான். விரைவில் மாநாடு காத்திருக்குது தமிழ்நாடு…வா தலைவா” என்றும் “பிறந்த நாள் காணும் அன்புத் தளபதி. நாளைய தமிழக முதல்வர்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக மாநாடு நடத்த உள்ளாரா விஜய்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், ’இந்த சுவர் விளம்பரத்தை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செய்துள்ளனர். ஆகையால்தான் விஜய் ரசிகர்கள் என்று தங்கள் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் இது குறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை’ என்கிறார்கள். ஆகையால், ரசிர்கர்கள் மத்தியில் ஒருவித குழப்பமும் இதனால் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய், அரசியல் பாதையை நோக்கி அடுத்தடுத்து நகர்கிறாரா? மேலும் ஒரு அரசியல் தலைவர் திரையில் இருந்து வருகிறாரா? அவரை மக்கள் ஏற்பார்களா…? பொறுத்திருந்து பார்க்கலாம்…
இதுகுறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சொல் தெரிந்து சொல் பகுதியை கீழ்க்காணும் வீடியோவில் காணலாம் :