பிரபல நடிகர் விஜய் தனது படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இதுவரை 3 முதலமைச்சர்களை சந்தித்துள்ளார். அவரின் எந்தெந்த படத்திற்காக, என்ன காரணங்களுக்காக சந்தித்தார் என்பதை விரிவாகக் காணலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் ‘தளபதி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், தனக்கே உரிய தனித்துவமான நடிப்பால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். இவரது படங்கள் ஒவ்வொன்றும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
நடிகர் விஜய்யின் படங்கள் பெரிதளவு வெற்றி பெருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த படங்கள் வெளியாவதில் பல சிக்கல்கள் எழுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. புதிய கீதை, காவலன், துப்பாக்கி, என அதன் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில் தலைவா, மாஸ்டர் மற்றும், விரைவில் வெளியாகவுள்ள வாரிசு ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக, நடிகர் விஜய், மூன்று முதலமைச்சர்களை இதுவரை சந்தித்துள்ளார்.
தலைவா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தலைவா’. இது அந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரிலீஸுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடைபெற்றன. தலைவா படத்தின் போஸ்டரில் “டைம் டு லீட்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்த நிலையில், இத்தகைய வாசகங்களைக் கொண்டிருந்த தலைவா படம் அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைவா படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு வைப்போம் என்ற மர்ம நபர்களின் கடிதம் அரசுக்கு கிடைத்ததாகக் கூறி, பாதுகாப்பு நலன் கருதி, அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, இப்படத்தை வெளியிட தடை விதித்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி, தமிழகத்தை தவிர்த்து பிற தென் மாநிலங்களில் தலைவா படம் வெளியானது.
இதையடுத்து விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், ஜெயலலிதாவை சந்திக்க கோடநாடு சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை. தியேட்டர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தமிழ்நாட்டில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இது விஷயமாகப் பேச மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். மிக விரைவில் அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
அம்மா தமிழகத்துக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார்கள். தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யும் அவர்கள், இந்த தலைவா பிரச்னையிலும் தலையிட்டுக் கூடிய சீக்கிரம் படம் வெளியாக உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியான சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 20ஆம் தேதி, தமிழ்நாட்டில் ’தலைவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ”டைம் டு லீட்” என்ற வாசகம் நீக்கப்பட்டே படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படம் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக, அப்போது, திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்ததாக, பரவலாக பேசப்பட்டது. இந்த சந்திப்பு, ரகசியமாக, நடைபெற்றதால், விஜய்யும் எடப்பாடி பழனிசாமியும், திரைப்படத்திற்காக பேசினரா? அல்லது அரசியல் குறித்து பேசினரா? என்ற கேள்வி அனைவரிடமும் அன்று எழுந்தது.
தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய் தன்னிடம், மாஸ்டர் திரைப்படத்திற்காக, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் மற்ற பல படங்களும், ரிலிஸுக்காக காத்திருப்பதாகவும், அவற்றிற்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய்யின் கோரிக்கையை ஏற்று மாஸ்டர் படத்திற்காக, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால், மீண்டும் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ’வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, அண்மையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும், மற்ற மொழி படங்கள் மற்றும் டப்பிங் படங்களுக்கு திரையரங்கில் முன்னுரிமை அளிக்க கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கை திரைத்துறையில் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும், பலரது கண்டனத்திற்கு உள்ளானது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நினைத்தபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து, வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் நடைபெற்றபோது, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்தார். அப்போது, ’தளபதி 66’ என்று தற்காலிகமாக வாரிசு படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை முன்னிட்டே விஜய், சந்திரசேகர் ராவை சந்தித்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தலைவா மற்றும் மாஸ்டர் படங்களுக்காக முதலமைச்சர்களை சந்தித்த விஜய், வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து மீண்டும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்திப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.
எதிர்பார்த்தபடி பொங்கலுக்கு, வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாகுமா? அல்லது விஜய் இப்படத்திற்காக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியையும், தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் சந்திப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்….







