இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் இணைந்த இரண்டாவது படமான ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், லோகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவது வரை பெரும் சிக்கல்கள். முதலில் நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது. அத்துடன் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது, 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், சில இடங்களில் லியோ படம் வெளியாகாது என திரையரங்கம் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
“விஜய் படம் என்றாலே ஏதாவதொரு பிரச்னை வந்துகொண்டே தான் இருக்கும். ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்னையானது. பின் அதை மாற்றினோம். கதாப்பாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்தக் கெட்ட வார்த்தையை வைத்தோம். அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது. அந்த கதாபாத்திரம் தான். கட்டாயம் அந்த வார்த்தை திரையில் வராது.
அது இல்லையென்றாலும் வேறு எதையாவது ஒன்றை வைத்து பிரச்னை வரத்தான் செய்யும். வன்முறை அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை அது ஆக்ஷன் திரில்லர்தான். படத்தில் அதிகளவில் போதை மற்றும் அக்ஷன் காட்சிகளை காட்டுவது போதைப்பழக்கத்தை நிறுத்துவதற்கே தவிர, ஊக்கப்படுத்த இல்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லும்போது பெரியளவில் மக்களிடம் சென்று சேரும் என்பதால் இதுபோன்ற கருத்துகளை சொல்கிறோம்.
‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாதியில் விஜய்யை குடிகாரனாகக் காட்டியிருப்போம். பின்னர், அவரே இரண்டாம் பாதி முழுக்க குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசியிருப்பார். 18+ வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்ல திரையரங்கு முன் நிற்கிறார்கள். ஆனால், எந்தவொரு மதுபானக்கடையிலும் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாரும் நிக்கவில்லை என்பதே ‘மாஸ்டர்’ படத்தில் சொல்லியிருந்தோம்.
படத்தில் ஓரளவிற்குத் தான் கருத்து சொல்ல முடியும். படம் முழுக்க பாடமாக எடுத்தால் அது நல்ல இருக்காது. என்னை நம்பிய தயாரிப்பாளருக்கும் போட்டப் பணத்தை திருப்பி எடுத்துத் தர வேண்டும். பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணுவதால் எனக்கு எந்த அழுத்தமும் ஏற்படுவதில்லை. முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் ரஜினியுடன் எடுக்கப் போகும் அடுத்தப்படம் முற்றிலும் வேறு ஜானரில் இருக்கும். ‘இரும்புக் கை மாயாவி’ வேறு ஜானரில் இருக்கும்.
படம் எடுப்பதுதான் என் கையில் இருக்கிறது. திரையரங்கு விநியோகம், டிக்கெட் பிரச்னை எல்லாம் என் கையில் இல்லை. படம் எடுப்பதை விட அது ரிலீஸ்யாகும் போது தான் அதிக ப்ரஸர் இருக்கும். எங்களுக்கே குறிப்பிட்ட டிக்கெட்கள் தேவைப்பட்டது. ஆனால், எங்களுக்கேக் கிடைக்கவில்லை. இது என் கையில்லை. இப்படம் ‘LCU’ உதயநிதி சார் ட்வீட் போட்டு பக்கத்தில் ஒரு கண்ணடிக்கும் எமோஜியும் போட்டிருந்தார். அது சஸ்பென்ஸ், படத்தை பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்” என்று கூறினார்.







