பீஸ்ட் மோடுக்கு மாறி திரையை கிழித்த விஜய் ரசிகர்கள்!

தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைபடத்தின் முதல் காட்சிக்கு வந்த ரசிகர்களில் சிலர் திரையரங்கின் திரைகளை கிழித்ததோடு கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது கொண்டாட்டங்கள் கலைகட்டும் அதே வேலையில், அசம்பாவிதங்களும்…

தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைபடத்தின் முதல் காட்சிக்கு வந்த ரசிகர்களில் சிலர் திரையரங்கின் திரைகளை கிழித்ததோடு கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர்.

உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது கொண்டாட்டங்கள் கலைகட்டும் அதே வேலையில், அசம்பாவிதங்களும் சில சமயங்களில் அரங்கேறிவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரம் முன்பே விற்றுத்தீர்ந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் கோலகலமாக வெளியானது பீஸ்ட்.

இப்படத்திற்கான ட்ரெயிலரின் போதே திரையரங்கு ஒன்றின் முகப்பு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, இருக்கைகளும் நொறுக்கப்பட்டது. அதனாலோ என்னவோ, பல்வேறு திரையரங்குகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

“இதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களின் கண்கள் முன்பு வந்து போகாதா என்ன?”

இந்நிலையில், சேலத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ், கைலாஷ் பிரகாஷ் ஆகிய இரண்டு திரையரங்குகளில் ரசிகர்கள் மேளதாளத்துடன் திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம் அப்படியே, கொஞ்சம் கொஞ்சமாக ‘பீஸ்ட் மோடு’-க்கு மாறி… அங்கிருந்த கண்ணாடிகளை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளது… இதன் பிறகு 7 மணி காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட போது மீண்டும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கிருருந்த திரையரங்கு பணியாளர்கள் மீது கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளது. இந்த விரும்பதகாத சாகசத்தில் ஈடுபட்ட போது காயமுற்ற விஜய் ரசிகரை ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து விஜய் ரசிகர்களிடையே திரையரங்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வசந்தம் பேலஸ் என்னும் திரையரங்கில் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், படம் திரையிடப்படுவதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட இந்த சாகசத்தால் திரை கிழிந்துள்ளது. இதனால், கிழிந்த திரையோடு அப்படத்தை காணும் அவல நிலைக்கு விஜய் ரசிகர்கள் தள்ளப்பட்டனர்.

இதனால், படம் முழுவதும் ஓடிய பின்னர் அடுத்த காட்சிக்குள் படத்திரை சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது விஷமிகள் சிலர் ரசிகர்கள் போர்வையில் திரையரங்கில் நுழைந்து திரையை கிழித்து இருக்கலாம், என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ரசிகர்கள் கொஞ்சம் ‘எமோஷனை கண்ட்ரோல்’ செய்ய வேண்டும் என்று சினிமா ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.