நடிகர் விஜய் திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, அவரது ரசிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது
நடிகர் விஜய் 1992ல் நாளைய தீர்ப்பு படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் இதே நாளில் (டிச.04) வெளியானது. இந்நிலையில், திரைத்துறையில் கால்பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த தருணத்தில் திரைத்துறையினர், அவரது நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.
விஜய் பல படங்களில் நடித்தாலும், எப்போது அரசியலில் கால்பதிப்பார் என்று ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது விஜய் மக்கள் இயக்கம் தான். 2009ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக விஜய் மாற்றினார் இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில இடங்களில் வெற்றி பெற்றது விஜய் மக்கள் இயக்கம்.
நவ.20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் விஜய். இதன் மூலமாக விஜய் அரசியலுக்கு வருவது சூசகமாக தெரிகிறது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டன.
இந்நிலையில், நடிகர் விஜய் திரைத்துறையில் கால்பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, ஆண்டிப்பட்டி ஒன்றிய தலைமை சார்பில் ”கனவு முதல்வரே, நாளைய முதல்வரே ” என ஒட்டியுள்ளனர்.
தேனி மாவட்ட தலைமை சார்பில் ”ஜாதி, மதங்களை கடந்த முதல்வரே” எனவும், ”30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி: அடுத்த 30 ஆண்டுகள் அரசியல் முதல்வர்” எனவும், ”சினிமாவில் தளபதி நாளைய தமிழகத்தின் முதல்வரே” எனவும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இப்படியாக வழியெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து மக்களுக்கு இன்னும் ஆர்வங்களை துண்டி வருகிறது.
– சுஷ்மா சுரேஷ்












