வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் – இரு தினங்களுக்கு பூங்கா மூடல்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 7 நீர்ப்பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, பூங்கா அக்.22 மற்றும் அக்.23 மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பு 7 நீர்ப்பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து, தீவிர கிருமிநாசினி சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

H5N1 வைரஸ் பாதிப்பு உறுதி

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளைப் பரிசோதனைக்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு (NIHSAD) அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று, அந்தப் பறவைகளுக்கு H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனை முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூங்கா இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பறவைகள் உயிரிழந்தபோதே அவற்றின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பினோம். அதற்கான முடிவுகள் இன்று கிடைத்தன. பறவைகள் உயிரிழந்தது தெரியவந்த உடனேயே அனைத்து கிருமிநாசினி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 9-ம் தேதி கடைசியாக ஒரு பறவை உயிரிழந்தது. அதற்குப் பிறகு எந்தப் பறவையும் உயிரிழக்கவில்லை” என்றார்.

7 நீர்ப்பறவைகள் உயிரிழப்பு

அதிகாரிகளின் தகவலின்படி, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை பூங்காவில் 4 வர்ண நாரைகள் (Painted Storks), ஒரு சாம்பல் நிறப் பெலிக்கன், ஒரு சாம்பல் நிறக் கொக்கு (Grey Heron), ஒரு பாம்புத்தாரா (Darter) ஆகிய 7 நீர்ப்பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, எஞ்சியுள்ள பறவைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பறவைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதுகுறித்து பூங்கா இயக்குநர் மேலும் கூறுகையில், “அனைத்து நீர்ப்பறவைகளுக்கும் ஏழு நாட்களுக்கு மீன்கள் மூலம் தடுப்பு நடவடிக்கையாக வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மூலிகை வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் கல்லீரல் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து நீர்ப்பறவைகள் இருப்பிடங்களிலும் வைரஸ் எதிர்ப்பு கிருமிநாசினி கரைசல் தெளிக்கப்பட்டது. பறவைகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தண்ணீரும் கிருமிநாசினி மூலம் சுத்திகரிக்கப்பட்டு, பழைய நீர் அகற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி கயிறுகள் கட்டப்பட்டு, பார்வையாளர்கள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது” என்றார்.

2 நாட்களுக்கு பூங்கா மூடல்

பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து, தீவிர சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வண்டலூர் உயிரியல் பூங்கா அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.