விருதுநகர் அருகே கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதோடு, தவறாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மனை கண்டித்து மாணவ, மாணவியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரில் 300-க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கேட்டரிங் மற்றும் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் சேர்மனாக தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் உள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னால், இதே கல்லூரி மாணவியிடம் ஜான் கிரேஸ் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அது தொடர்பான வீடியோ ஒன்று கல்லூரி மாணவிகளிடம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தது. எனவே கல்லூரி சேர்மனை கைது செய்ய வேண்டும் எனக் கூறி கல்லூரி முன்பு மாணவ மாணவிகள் முற்றுகை பேராட்டம் நடத்தினர். தவலறிந்த காவல்துறையினர் தாஸ்வின் ஜானை விசாரணைக்காக நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சேர்மன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரவேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். அதுவரை போராட்டம் தொடரும் என்று முழக்கமிட்டனர்.
பின்னர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்ததையடுத்து, மாணவர்கள் திடீரென விருதுநகர் சாலையில் நின்று மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்கள் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வட்டாட்சியர் அறிவழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மாணவ, மாணவியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
– இரா.நம்பிராஜன்








