“தலித் சினிமாவின் ரூட்டு தல ரஞ்சித்!”

உலகப்புகழ்பெற்ற பத்திரிகையான அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட் (Washington post)’ தமிழ் சினிமாவின் தவிக்கமுடியாத இயக்குநரான பா.ரஞ்சித் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், ‘இந்தியாவில் பல ஆண்டுகளாக சாதிய ஒடுக்குக்குமுறைக்கு எதிராக…

உலகப்புகழ்பெற்ற பத்திரிகையான அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட் (Washington post)’ தமிழ் சினிமாவின் தவிக்கமுடியாத இயக்குநரான பா.ரஞ்சித் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையில், ‘இந்தியாவில் பல ஆண்டுகளாக சாதிய ஒடுக்குக்குமுறைக்கு எதிராக சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் போதிலும், சாதிய இறுக்கங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தலித் கதாப்பாத்திரங்களை கதாநாயகனாகக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைகளை படம்பிடித்துக்காட்டி வணிகரீதியாக வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் தலித் சினிமா படைப்பாளி பா.ரஞ்சித்.’

‘அமெரிக்காவின் civil rights காலகட்டத்தின் போது கருப்பின மக்களின் உரிமைகளுக்காக கருப்பின கலைஞர்கள் பலரும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தது போல், தலித் சமூகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு செழிப்பான கலாச்சார மற்றும் பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளார் ரஞ்சித். இந்திய சினிமாவில் தலித் மக்கள் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்படுவதையும், புறக்கணிக்கப்படுவதையும் மாற்றுவதே ரஞ்சித்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது. சினிமா மட்டுமல்லாமல் இளம் தலித் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிப்பகம்( நீலம் பதிப்பகம்) , சாதிக்கு எதிரான இசைக்குழு(castless collective), தலித் மக்களின் வாழ்வியல் மற்றும் உணவுமுறைகளை காண்பிக்கும் யூ-டியூப் சேனல் மற்றும் படிப்பதற்கு நூலகம்(கூகை) உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார் ரஞ்சித்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘பிரச்சார தொனி இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கலைத்தன்மையுடன் கூடிய படைப்புகளை அவர் ரஞ்சித் வழங்கிவருகிறார். இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என பல்வேறு விமர்சனங்களும், வழக்குகளும் பதியப்பட்டாலும் அதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து சமூக மற்றும் கலைப்பணியாற்றிக்கொண்டிருக்கிறார் . அவரின் முன்னெடுப்புகளும் அதற்கான வெற்றிகளும் இளைஞர்கள் பலரையும் வெகுவாக சமூக பணியாற்றவும், கலைத்துறைக்கு வரவும் ஊக்குவிக்கிறது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டகத்தி தொடங்கி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சாதிய இறுக்கங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பல்வேறு தளங்களில் கதைக்களம் அமைத்து விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவரின் படைப்புகளுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர்கள் மட்டுமல்லாமல் மூத்த இயக்குநர்களுமே கூட சாதியத்திற்கு எதிரான கருத்துக்களைக்கொண்டு தங்களின் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினர். தலித் சினிமாவுக்கான ‘ரூட்டுத்தல ரஞ்சித்’என்றும் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் முயற்சிகளையும், வெற்றிகளையும் சர்வதே பத்திரிக்கை ஒன்று பாராட்டி எழுதுவது அவரின் சமூகப்பணிக்கும் கலைப்பணிக்கும் சூட்டப்பட்டுள்ள மற்றுமொரு முக்கியமான மகுடமாக பார்க்கப்படுகிறது.

  • வேல் பிரசாந்த்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.