மறைமுக விளம்பரங்களுக்கு தடை – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்…

மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றும் இது சமூகத் தீமைகளைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மது மற்றும் புகையிலைப் பழக்கங்களிலிருந்து மீண்டு வாழ நினைப்போரையும், சிறுவர்களையும் மது மற்றும் புகையிலைப் பழக்கங்களை நோக்கி இந்த மறைமுக விளம்பரங்கள் இழுப்பதாக  அன்புமணி  குற்றம்சாட்டினார். எனவே, மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகரிப்பதற்கு இத்தகைய மறைமுக விளம்பரங்கள் தான் காரணம் என்றார்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திடல்களில் வைக்கப்படும் மது மற்றும் புகையிலை சார்ந்த மறைமுக விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அன்புமணி, அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மது மற்றும் புகையிலை தொடர்பான மறைமுக விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவத்த அன்புமணி ராமதாஸ், இப்போது மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.