பாஜகவை விமர்சித்து பெண் அரசியல் தலைவர் பேசிய வீடியோ பழையது – உண்மை சரிபார்ப்பில் தகவல்!

This News was Fact Checked by Aaj Tak பாஜகவை பெண் அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்து பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்,  அந்த வீடியோ 6…

This News was Fact Checked by Aaj Tak

பாஜகவை பெண் அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்து பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்,  அந்த வீடியோ 6 வருடங்களுக்கு முந்தையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,  பாஜகவை விட்டு வெளியேறி,  காங்கிரஸ் கட்சியில் இணைந்திடுங்கள். பாஜக, செல்வம் மற்றும் பெண்களின் கட்சி. உங்களின் மனைவியை கொடுங்கள், அல்லது உங்களது செல்வங்களை கொடுங்கள். நான் இரண்டையும் கொடுக்காததால், இன்று இங்கு நிற்கிறேன்” என்று பெண் அரசியல் தலைவர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பயனர் ஒருவர், “இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  முன்னாள் பாஜக தலைவர் வித்யா பட்டேல், பாஜகவிற்குள் நடக்கும் கதைகளை கூறுகிறார்” என்று பதிவிட்டிருந்தார். இது வைரலானது.உண்மை சரிபார்ப்பு

வைரலான பெண் தலைவரின் வீடியோவின் உண்மை தன்மை குறித்து ‘Aaj Tak’ ஆய்வு செய்தது.  அதன் முடிவில்,  2018 ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த போது வித்யா பட்டேல் பேசிய வீடியோ தான் இது என்பதும்,  வித்யா பட்டேல் கடந்த 2023 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.

கீவர்ட் ஸர்ச் உதவியுடன் இந்த வீடியோ ‘MP Tak’ என்ற யூடியூப் சேனலில் கிடைக்கப்பெற்றது. நவம்பர் 18, 2018 என்ற தேதியிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது. வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் பாஜகவை விமர்சித்து/தாக்கி வித்யா பட்டேல் பேசியது இது என்பது தெரியவந்தது. தங்களது மனைவி அல்லது செல்வங்களை, சொத்துக்களை கொடுப்பவர்கள் மட்டுமே பாஜகவில் பெரிய பொறுப்புகளைப் பெற்று முன்னேற முடியும் என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த தகவல்களின் உதவியுடன், பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளும் கிடைத்தன. அவற்றின்படி, 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வித்யா பட்டேல் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது கட்னி மாவட்டத்தின் பஞ்சாயத்து உறுப்பினராக வீடியோவில் பேசும் வித்யா பட்டேல் இருந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தின் போரிபந்தில் முக்கிய பாஜக தலைவராக வித்யா பட்டேல் இருந்துள்ளார். ஆனால், தேர்தலில் போட்டியிட பிரணாய் பாண்டேவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியதால், அதிருப்தி அடைந்த வித்யா பட்டேல், பாஜகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். நவம்பர் 17, 2018 அன்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்த வித்யா பட்டேல், அடுத்த நாள் (நவ.18, 2018) கட்னி மாவட்டத்தில் பாஜகவை விமர்சித்து உரையாற்றியுள்ளார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 18, 2018 அன்று இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. வித்யா பட்டேல் மாரடைப்பு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம், பாஜகவை விமர்சித்து வித்யா பட்டேல் பேசி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This Story was originally published by ‘Aaj Tak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.