யார் வெற்றி பெற்று பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுவதைவிட, யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறக் கூடாது என்பதை மட்டுமே இப்போதைக்கு கொள்கையாகக் கொண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ள அந்த தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : Live Updates
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்ற வேண்டுகோளை மக்களிடம் தொடர்ந்து விடுத்தேன். திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து பெரிய அளவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மக்கள் இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு, ஈரோடு இடைத்தேர்தல் மூலமாக மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள்.
20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு பொதுமக்கள் அங்கீகாரம் தர வேண்டும். இடைத்தேர்தலாக மட்டும் இல்லாமல் இந்த ஆட்சியை எடை போட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும் என பொதுமக்களிடம் நான் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன். இந்நிலையில் இந்த ஆட்சிக்கு மிகவும் வலுசேர்க்கக் கூடிய வகையில் மேலும் ஒரு வெற்றியைத் தேடி தந்துள்ளார்கள்.
விரைவில் சந்திக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெருவதற்கு இந்த இடைத்தேர்தல் அச்சாரமாக அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அந்த தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பிலும், திமுக சார்பிலும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு பணியாற்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச்செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட ஒரு மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்.
நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்று எண்ணுவதைவிட, யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறக் கூடாது என்பதை மட்டுமே இப்போதைக்கு கொள்கையாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :








