கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தளர்வுகளற்ற இந்த ஊரடங்கை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்துக் கடை களும் இன்றும் நாளையும் இரவு வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று கோயம்பேடு மார்க்கெட்டில், பொதுமக்கள் திடீரென கூடி காய்கறிகள் வாங்க முயன்றனர். திங்கட்கிழமைக்குப் பிறகு கடைகள் திறக்கப்படாது என்பதால், இப்போதே வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள மக்கள் முயற்சிக்கின்றனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ஆனால், காய்கறிகள் குறைவாகவே இருப்பதால், விலை அதிகரித்துள்ளது. வழக்கமான விலையை விட ஐம்பது சதவிதம் விலை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.