வாரிசு டிரைலர்…விஜய் பதில் சொல்வது ரஜினிக்கா?…அஜித்துக்கா?…

வாரிசு பட டிரைலர் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர் விஜய் ரசிகர்கள். துணிவு, வாரிசு படங்களின் வெளியீடு இறுதிப்போட்டி என்றால் அந்த படங்களின் டிரைலர்கள் வெளியீடோ அறை இறுதி ஆட்டம் போல் அனல் பறக்க…

வாரிசு பட டிரைலர் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர் விஜய் ரசிகர்கள். துணிவு, வாரிசு படங்களின் வெளியீடு இறுதிப்போட்டி என்றால் அந்த படங்களின் டிரைலர்கள் வெளியீடோ அறை இறுதி ஆட்டம் போல் அனல் பறக்க வைத்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் துணிவு பட டிரைலர் வெளியானது. அதனை அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். தற்போது வாரிசு பட டிரைலர் வெளியாகி விஜய் ரசிகர்களை குதூகலம் அடைய வைத்துள்ளது.  துணிவு படத்தின் டிரைலரில் அஜித் பேசும் வசனங்கள், கதையோட்டத்தோடு ஒட்டியே அமைக்கப்பட்டது போல் தோன்றினாலும், வாரிசு படத்தில் விஜய் பேசும் வசனங்கள் படத்தையும் தாண்டி பல்வேறு ஒப்பீட்டை முன்னெடுக்க வைக்கிறது.

”எல்லா இடமும் நம்ம இடம்தான்”

சமீபத்தில் நடைபெற்ற வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில்,  பேசிய படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும், நடிகர் சரத்குமாரும், விஜயை சூப்பர் ஸ்டார் என்று வர்ணித்தார்காள். ஏற்கனவே கறுப்பு வெள்ளை காலம் தொடங்கி சுமார் 45 வருடங்களாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டு வரும் நிலையில், தன்னை சூப்பர் ஸ்டார் என்று சரத்குமாரும், தில் ராஜூவும் கூறியதை விஜய் பெயரளவிற்காவது மறுத்துபேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் பேசும்போது அவ்வாறு எதையும் மறுத்து பேசவில்லை. இதன் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்புது புலப்படுகிறது என்கிற வாதங்களும் எழுந்தன. “எனக்கு நான்தான் போட்டி” என்று அந்த ஆடியோ விழாவில் விஜய் கூறினார். இதன் மூலம் தாம் நம்பர் 1 இடத்தை அடைந்தது தெள்ளத் தெளிவாகிவிட்டது,  எனக்கான இடத்திற்கும் மற்றவர்களுக்கான இடத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது என்று விஜய் சொல்ல வருகிறாரா என்றும் பேசப்பட்டது. இந்த ஆடியோ விழாவிற்கு பின்னர்,  சூப்பர் ஸ்டார் ரஜினியா அல்லது விஜயா என்கிற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் வாரிசு பட டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் விஜய் பேசும் முதல் வசனம், “அம்மா…எல்லா இடமும் நம்ம இடம்தான்” என்பதுதான். நீ எங்கடா இருக்க என்கிற கேள்விக்கு பதிலாக இந்த டயலாக்கை விஜய் பேசுகிறார். வாரிசு படத்திற்கு வெளியே விஜயை சூழ்ந்துள்ள பரபரப்புகளுடன் இந்த வசனத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, தளபதியும் நான்தான், நம்பர் 1ம் நான்தான், சூப்பர் ஸ்டாரும் நான்தான் என விஜய் கூறுவது போல் ரசிகர்கள் அர்த்தம் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

”பவர் சீட்டுல இல்ல சார்”

வாரிசு குடும்ப பின்னணியை கொண்ட கதைக் களமாக இருந்தாலும், அதில் பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை உணர்த்துவது போல், வாரிசு டிரைலரில் பஞ்ச் டயலாக்குகள் அணி வகுக்கின்றன. அந்த வகையில் விஜய் பேசும் இன்னொரு வசனம், ”பவர் சீட்டுல இல்ல சார் அதுல வந்து ஒருத்தன் உட்காரான்ல அவன்கிட்டதான் இருக்கும்”  என்பது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் இருக்கையைவிட உயர்வான இடத்திற்கு தாம் அமர்ந்திருக்கும் தளபதி என்கிற இருக்கை சென்றுவிட்டது என்று விஜய் கூறுவது போலவும் ரசிகர்களுக்கு தோன்றலாம். போதாக்குறைக்கு ”நீ என்னை தாண்டி எங்கோ போயிட்டடா” என்ற வசனமும் டிரைலரில் இடம்பெறுகிறது.

”அன்பும் அடியும்”

பணக்காரன் படத்தில் ரஜினி பேசும் ஒரு வசனம் வேறொரு கோணத்தில் வாரிசு படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ”கண்ணா… நான் எப்பவும் முதலில் வாங்கிக்குவேன், அப்புறம்தான் திருப்பிக் கொடுப்பேன் அன்பும் சரி… அடியும் சரி” இது பணக்காரன் படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக். ”அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கனும், ஏன் சொல்லு?… நீ எதைக் கொடுத்தாலும் அதனை நான் டிரிபுளா திருப்பிக் கொடுப்பேன்” அன்பையும், அடியையும் வைத்து வாரிசு படத்தில் விஜய் பேசியுள்ள பஞ்ச் டயலாக் இது. இதனை கேட்கும்போது ரஜினியைவிட மூன்று மடங்கு வளர்ந்துவிட்டேன் என்பதாக விஜய் கூறுகிறார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

”ஆட்ட நாயகன்”

”கிரவுண்ட் மொத்தமும் உன் ஆட்கள் இருக்கலாம். ஆனால் ஆடியன்ஸ் ஒருத்தரத்தான் பார்ப்பாங்க… ஆட்ட நாயகன்” என்கிற வசனம் அஜித்துக்கான பதிலாக தோன்றலாம். அஜித்துக்கு தியேட்டரில் எவ்வளவு கூட்டம் கூடினாலும், இறுதியில் வென்று தமிழ் திரையுலகின் ஆட்டநாயகனாக விளங்குவது தாம்தான் என விஜய் கூறுவது போல் நினைத்து வாரிசு திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கலாம்.

தற்போது சூப்பர் ஸ்டார் பட்டம் விவாத பொருளாக கிளப்பபட்டுள்ள நிலையில் வாரிசு பட டிரைலரில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் பெரும்பாலும் ரஜினிக்கு பதில் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகின்றன.

ரஜினி, விஜய், அஜித் அகிய மூவர் நட்பாக பழகினாலும், நம்பர் 1 நடிகர் யார் என்று ரசிகர்கள் மத்தியில் எழுப்பபடும் விவாதமும், பரபரப்பும்  வாரிசு படத்தின் கதையோட்டத்திற்காக எழுதப்படும் வசனங்களைக்கூட  ரசிகர்களை பல்வேறு விதங்களில் அர்த்தம்கொள்ள வைக்கிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.