வாரிசு, துணிவு படங்களின் நேரடி மோதல் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திருவிழாபோல் அரங்கேறியிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் நடந்திருக்கும் விஜய்- அஜித் படங்களின் நேரடி மோதலில் வெல்வது யார் என்கிற கேள்வி கோலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய்- அஜித் படங்கள் தனிதனியாக வந்தாலே திரையரங்குகள் திருவிழாக்கோலம் காணும். இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வருகிறது என்றால் அந்த எதிர்பார்ப்பு குறித்து சொல்லவே தேவையில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் சினிமாத்துறை செலிபிரிட்டிகளிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளில் மறக்காமல் கேட்கப்பட்ட கேள்வி வாரிசு படத்தை முதலில் பார்ப்பீர்களா?, துணிவு படத்தை முதலில் பார்ப்பீர்களா? என்பதுதான். இந்த கேள்வியை சம்பிரதாயமாக கேட்டே ஆகவேண்டும் என்பதுபோல் வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த இரு படங்களின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டிலிருந்து, டிரைலர் வெளியீடு வரை தங்கள் பலத்தை நிரூபிக்க விஜய், அஜித்தின் தீவிர ரசிகர்கள் காட்டிய வெறித்தனமான போட்டி இந்த பரபரப்பை உருவாக்கியது.
இந்த நிலையில் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியோடு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் உலகெங்கிலும் வெளியானது. இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும், யாருக்கு மாஸ் அதிகம் என்கிற போட்டி விஜய், அஜித் ரசிகர்களை வெறிகொல்ல வைத்ததிருந்தது. இந்த நிலையில் முதல் நாள் வசூலில் முந்துவது யார் என்கிற கேள்வி இரு ரசிகர்களிடையேயும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. குறிப்பாக இரண்டு படங்களுக்கும் கிட்டதட்ட சரிசமமான எண்ணிக்கையில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டில் கிங் ஆஃப் ஓபனிங் என்று நிரூபிக்கப்போவது யார் என்கிற கேள்வி விஜய், அஜித் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இன்று காலை முதலே இந்த கேள்விக்கு விடை தேடுவதில் இரு ரசிகர்களும், தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் முந்தி, தாம் கிங் ஆஃப் ஓபனிங்க் என்பதை அஜித் நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தின் துணிவு படம் முதல் நாள் வசூலில் முந்தியிருப்பதாக திரைப்படங்களின் வசூல் விவரங்களை அலசும் பிரபல சினிமா டிராக்கரும், விமர்சகருமான ரமேஷ் பாலா கூறியுள்ளார். சினிமா வட்டார வசூல் விபரங்களை ஆராயும் பல இணையத்தளங்களும் தமிழ்நாட்டில் வாரிசு படத்தைவிட துணிவு படம் அதிக வசூலை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளன. எனினும் இரண்டு படங்களின் வசூல் விபரங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் வரும்போதே அந்த படம் அஜித் ரசிகர்களுக்கான விருந்தாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விறுவிறுப்பான திரைக்கதையோடு நகரும் துணிவு படத்தில் அஜித் அமர்க்களம் செய்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. குறிப்பாக துணிவு படத்தின் முதல்பாதியில் அஜித்குமார் நடிப்பு ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதாகவும் பரவலான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் வசூலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை வாரிசு படத்தை துணிவு மிஞ்சிய அதே வேளையில் உலக அளவில் துணிவு படத்தைவிட வாரிசு அதிக வசூலை அள்ளியிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜயின் அதிரடி ஆக்ஷன்களுடன், குடும்ப பாசத்தை பின்னணியாக கொண்ட வாரிசு படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. முதல் நாள் வசூலில் துணிவு வென்றிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் முந்தப்போவது யார்?, இறுதி வெற்றி விஜய்க்கா? அல்லது அஜித்துக்கா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.