32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

பொன்னியின் செல்வனில் வந்திய தேவன் பயணம்- நிழலும்…நிஜமும்…(பாகம் 2)


எஸ்.இலட்சுமணன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்களால் ஜொலிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெருவரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் இந்த திரைப்படத்தின் மூலாதாரமாக விளங்கும் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் குறித்து அலசி வருகிறோம். கடந்த கட்டுரையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் முதல்கட்ட பயணத்தில் அவர் சந்தித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து பார்த்தோம். இந்த கட்டுரையில் வந்தியத் தேவன் பயணத்தின் இரண்டாம் கட்ட பயணத்தில் அவர் செல்லும் இடங்கள், அவற்றின் வரலாற்று சிறப்புகள், தற்போது அந்த இடங்கள் எப்படி உள்ளன என்பது குறித்து காண்போம்.  

பழையாறை அரண்மனைக்குச் சென்று அரசிளங்குமரி குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலன் அளித்த இரண்டாவது ஓலையை அவரிடம் அளிப்பார். இதற்காக காஞ்சிபுரத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரம் குதிரையிலும், படகிலும் கடந்து வந்திருப்பார் வந்தியத் தேவன். வெறும் தூரத்தை மட்டும் கடக்கவில்லை, ஆபத்து, ஆச்சர்யம், நம்பிக்கை, தூரோகம், பகை, நட்பு, காதல், மோதல் என பல்வேறு உணர்களுக்கு தம்மை ஆளாக்கிய நிகழ்வுகளையும் அவர் கடந்து வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அளவோடு தமது பயணம் முடிந்துவிட்டது இனி காஞ்சிபுரம் திரும்பிச் செல்லலாம் என்று நிம்மதியடைந்த வந்தியத் தேவனிடம், உனது வேலை முடியவில்லை, இனிமேல்தான் தொடங்குகிறது என புதிர் போடுகிறார் குந்தவை. இலங்கையில் உள்ள தனது தம்பி அருள்மொழிவர்மனிடம் ராஜாங்க ரகசிய செய்தி அடங்கிய ஓலையை கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். வந்தியத்தேவன் இதற்கு முதலில் தயங்கினாலும் பின்னர் இலங்கை செல்ல ஒப்புக்கொள்கிறார். இவனை நம்பி எந்த ராஜாங்க காரியத்தையும் கொடுக்கலாம் என்று வந்தியத்தேவன் குறித்து ஆதித்தய கரிகாலன் அளித்த நற்சான்றை குந்தவை சுட்டிக்காட்டியதாலும், அவர் மீது கொண்ட காதலாலும் மீண்டும் ஒரு ஆபத்தான பயணத்தை தொடங்க சம்மதிக்கிறார் வந்தியத்தேவன். வந்தியத் தேவனின் இந்த இரண்டாவது பயணத்தில் அவரது வழித்தடம் எங்கெல்லாம் செல்கிறது, அந்த வழித்தடங்களில் அவர் பயணித்ததாக கூறப்படும் முக்கிய இடங்கள் தற்போது எப்படி உள்ளன அதன் வரலாற்று சிறப்புகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

கோடியக்கரை

பழையாறையிலிருந்து இலங்கையை நோக்கிய இந்த பயணத்தில் அவர் அடைந்த முதல் இலக்கு கோடியக்கரை. முன்பு கோடிக்கரை என அழைக்கப்பட்ட இந்த இடம் பின்னர் பேச்சு வழக்கில் கோடியக்கரை என ஆனது. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த கோடியக்கரையில்தான் பொன்னியின் செல்வன் நாவலின் ஏழு அத்யாயங்கள் பயணிக்கின்றன. புதைகுழியில் சிக்கும் வந்தியதேவனை காப்பாற்றி அவருக்கு பூங்குழலி மறுஜென்மம் கொடுக்கும் சம்பவம் இந்த கோடியக்கரையில்தான் நிகழும். இங்கிருந்துதான் இலங்கைக்கு தனது கடல் பயணத்தை தொடங்குவார் வந்தியத்தேவன். ”கரை ஓரத்தில் படகு ஒன்று மிதந்தது. கடலின் மொல்லிய அலைப் பூங்கரங்கள், அந்த படகை குழந்தையின் மணி தொட்டிலை ஆட்டுவது போல் மெல்ல மெல்ல அசைத்தன” என்று தமது வார்த்தை ஜாலங்களால் கோடியக்கரை கடல் அழகிற்கு வர்ணம் தீட்டியிருப்பார் கல்கி.

இந்த கோடியக்கரையில் உள்ள குழகர் கோயில், சோழர்கள் காலத்து களங்கரை விளக்கம், அடர்ந்த வனப்பகுதி ஆகியவை பற்றி பொன்னியின் செல்வன் நாவலில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த மூன்றும் அங்கு தற்போதும் காணப்படுகின்றன. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் குழகர் ஆலயத்தின் பெருமைகள் குறித்து சுந்தரமூர்த்தி நாயனார் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். சோழர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட இந்த குழகர் கோயில் தற்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு வந்து குழகேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். சோழர் காலத்தில் கோடியக்கரை கடல் பகுதியில் ஆழம் குறைவாக இருந்ததால் கப்பல்கள், படகுகள் இங்கு வருவதை தடுக்கும் விதமாக ஒரு களங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது.

அந்த களங்கரை விளக்கத்தின் உச்சியில் தீ மூட்டி வெளிச்சம் எழுப்பி களங்கரை விளக்கமாக பயன்படுத்தப்பட்டதாக பொன்னியின் செல்வன் நாவல் கூறுகிறது. அந்த சோழர்கள் காலத்து களங்கரை விளக்கத்தின் வட்ட வடிவிலான சிதிலமடைந்த சுவர் பகுதி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம் அருகே அமைந்துள்ள இந்த தொல்லியல் எச்சத்தை காண அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் நாவலில் கோடியக்கரை கடற்கரையின் அழகையும் அதன் அருகே அமைந்துள்ள வனப்பகுதியின் அடர்த்தியையும் பிரம்மிப்பூட்டும் வகையில் அமரர் கல்கி விவரித்திருப்பார். அதனை நினைவுபடுத்துவதுபோல் தற்போதும் கடற்கரை பகுதியும், அதனை ஒட்டி உள்ள வன உயிரியல் சரணாலயமும் காணப்படுகிறது. ராமர் முதலில் கோடியக்கரையிலிருந்துதான் இலங்கைக்கு செல்ல நினைத்தார் ஆனால், இந்த வழியாக சென்றால் இலங்கையின் பின் புறத்தைத்தான் அடைய முடியும், ராவணனை நேருக்கு நேராக சென்றே எதிர்கொள்வேன் எனக் கூறி ராமேஸ்வரத்தைத் தேர்ந்தெடுத்ததாக ராமாயண இதிகாசத்தில் கூறப்படுகிறது. ஆனால் பொன்னியின் செல்வனில் ரகசியமாக செய்தியை அருள்மொழிவர்மனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் இருந்த வந்தியத்தேவன், கோடியக்கரை வழியாகத்தான் இலங்கை சென்றடைந்தார்.

பூத தீவு 

இலங்கையில் முதல்முறையாக புத்தர் கால்பதித்த தீவு இந்த பூதத் தீவு என்று பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி கூறியுள்ளார். புத்தர் இங்கு வந்து அரசமரத்தடியில் அமர்ந்து அங்குள்ள மக்களுக்கு போதனைகளை வழங்கிய இடம் என்பதால் இந்த இடம் முதலில் போதர் தீவு என அழைக்கப்பட்டு பின்னர் அது பூத தீவு என மருவியதாகவும் கல்கி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு வந்தியத்தேவனை அழைத்து வரும் பூங்குழலி அவரை கரையிலேயே நிறுத்திவிட்டு தீவில் உள்ள ஒரு மர்ம நபரை சந்தித்து இளவரசர் அருள்மொழிவர்மன் இருக்கும் இடம் குறித்து கேட்டறிந்து வருவதாக நாவலில் கூறப்பட்டிருக்கும்.

இலங்கையை சுற்றி  உள்ள 60க்கும் மேற்பட்ட தீவுகளில் பூத் தீவு என்கிற பெயரோடு தற்போது எந்த தீவும் அழைக்கப்படவில்லை என்றாலும்,  தற்போது யாழ்ப்பாண தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள புளியந் தீவு பகுதிதான் முற்காலத்தில் பூதத் தீவு என அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.

நாக தீவு

இலங்கையில் பூதத் தீவை அடுத்து வந்தியத் தேவன் பயணிக்கும் இடம்தான் நாகத்தீவு. நாகர்கள் என்ற இன மக்கள் அந்த தீவில் அதிக அளவில் வாழ்ந்ததால் நாகத் தீவு என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள நயினா தீவுதான் முற்காலத்தில் நாக தீவு என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீவில் உள்ள நாகபூஷணி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து தலங்களில் ஒன்றான நாகபூஷணி அம்மன் கோயில் 64 சக்தி பூடகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து தற்போதும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். இந்த நாகத் தீவிலிருந்துதான் இளவரசர் அருள்மொழி வர்மனை சந்திப்பதை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தை அடைவார் வந்தியத்தேவன்.

மாதோட்டம் 

நாகத் தீவிலிருந்து அடர்ந்த காடுகளை கடந்து வரும் வந்தியத்தேவன், ஈழக் கடற்கரையோரம் வழியாக பயணித்து மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மாதோட்டத்திற்கு வந்தடைவார். அங்குதான் அவர் ஆழ்வார்க்கடியானை மீண்டும் சந்திப்பார்.

இந்த மாதோட்டத்தின் எழிலையையும், இயற்கை சூழலையும் மிகவும் ரசித்து வர்ணித்திருப்பார் பொன்னியின் செல்வன் நாவலை எழுதுவதற்காகவே மூன்று முறை இலங்கைக்கு சென்றுவந்த கல்கி.  திருஞான சம்பந்தராலும், சுந்தர மூர்த்தி நாயனாராரும் இங்கு வந்து கேதீஸ்வரர் ஆலயத்தில் கேதீஸ்வரரை வழிபட்டு சென்றதாக கூறப்படுவதுண்டு.

ஆன்மீக கேந்திரமாக இருந்தாலும் பிற்காலத்தில் யுத்த கேந்திரம் என்கிற அடையாளமும் மாதோட்டத்திற்கு கிடைத்துவிட்டதாக கூறுகிறார் கல்கி. பாண்டியர்கள், சோழர்கள் இலங்கையில் படையெடுத்து வரும்போது இந்த கடற்கரையோர நகரத்தில்தான் அவர்களது படை வீரர்கள் முகாமிடுவது வழக்கமாம். பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான மாதோட்டம் கேதீஸ்வரர் ஆலயம் தற்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள பாலாவி நதியில் நீராடி கேதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

தம்புளா

பல்வேறு திருப்பங்களை கடந்து பொன்னியின் செல்வரான அருள்மொழிவர்மனை வந்தியத் தேவனை சந்திக்கும் இடம்தான் தம்புளா. இலங்கையில் மதாலோ மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புளாவில் அமைந்துள்ள புத்தர் குகைக்கோயில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற புத்த தலமாக விளங்குகிறது. கொழும்புவிலிருந்து 72 கி.லோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தலம் தொடர்ச்சியான 5 குகைகளை உள்ளடக்கியது.

தம்புள்ளா பொற்கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் 2100 சதுரமீட்டர் அளவிற்கு பரந்துவிரிந்துள்ளது. இந்த புத்த தலத்தில் 153 புத்தர் சிலைகள் அமைந்துள்ளன. சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட வலஹம்பாஹூ என்கிற மன்னன், தமிழர் படை இலங்கைக்கு படையெடுத்துச் சென்றபோது, தலைநகரிலிருந்து தப்பிச் சென்று இந்த தம்புளா குகைகளில் தஞ்சம் அடைந்தார். பின்னர் மீண்டும் அனுராதாபுரத்தை கைபற்றியபோது முன்பு தனக்கு அடைக்கலம் அளித்து உயிரைக் காப்பாற்றிய தம்புளா குகையில் புத்தருக்கு கோயில் எடுத்ததாக பொன்னியின் செல்வனில் கல்கி குறிப்பிடுகிறார். உலக பாரம்பரிய தொல்லியல் சின்னமாக  இந்த குகை கோயிலை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

தம்புளா வனப்பகுதியில் யானைப்பாகன் வடிவில் அருள்மொழிவர்மன் இருந்தபோதுதான், அவரை கண்டுகொண்டு குந்தவை பிராட்டி அளித்த ஓலையை வந்தியத்தேவன் வழங்குவார். இந்த வரலாறு நடைபெற்ற காலத்தில் அந்த தம்புளா பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தம்புளாவில் நடைபெற்ற புத்த வழிபாடுகளுக்கும், திருவிழாக்களுக்கும் எந்த இடையூறும் வராமல் அருள்மொழிவர்மன் பார்த்துக்கொண்டதாக அவரது உயரிய குணத்திற்கு உதாரணத்தை கூறுகிறார் கல்கி.

அனுராதபுரம்

பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க இடம் அனுராதபுரம். வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியான் நம்பியையும் அழைத்துக்கொண்டு இங்கு வருவார் அருள் மொழிவர்மன். புத்த பிட்சுகள் ஒன்றுகூடி இலங்கை சிங்காதனத்தில் அமர அருள்மொழி வர்மனுக்கு கோரிக்கை விடுத்ததும், அதனை அருள்மொழி வர்மன் மறுத்ததும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில்தான் நிகழ்ந்ததாக பொன்னியின் செல்வன் நாவல் கூறுகிறது.

இலங்கை தீவின் தொன்மைமிக்க அந்த தலைநகரை சற்றுதொலைவிலிருந்து பார்த்தபோதே வந்தியத் தேவன் அதிசயக் கடலில் மூழ்கி பேசும் சக்தியை இழந்தான் என அனுராதபுரத்தின் பிரம்மாண்டத்தை தமது நாவலில் வர்ணிக்கிறார் கல்கி. இலங்கையின் தற்போதைய தலைநகர் கொழும்புவிலிருந்து 205 கி.மீ தொலையில் அமைந்துள்ள இந்த அனுராதபுரம்தான் தற்போது இலங்கை வடக்கு மத்திய மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகிறது.

இங்குள்ள 1500 ஆண்டுகள் பழமையான மகா போதிமரம், மஹாவிகாரை ஆகியவை பொன்னியின் செல்வனில் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தற்போது இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன.

காஞ்சிபுரத்தில் தொடங்கி அனுராதாபுரம் வரையிலான வந்தியத்தேவன் பயணம் மூலம் பொன்னியின் செல்வன் கதையை மட்டுமல்ல அந்த இடங்களோடு தொடர்புடைய பல்வேறு வரலாற்றையும், சரித்திரத்தையும் சொல்லியிருக்கிறார் அமரர் கல்கி. அந்த வரலாற்று சுவடுகளை நேரில் கண்டு ரசிக்க வந்தியத் தேவன் சென்ற வழித்தடத்தில் தற்போதும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணிக்கின்றனர்.

 

முதல் கட்டுரையை பார்க்க வேண்டும் என்றால் இதை கிளிக் செய்யவும் : https://news7tamil.live/vandhiyathevan-travel-in-ponniyin-selvan-imagination-and-reality.html

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading