முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் பயணம்: நிழலும்…நிஜமும்…


எஸ்.இலட்சுமணன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், அந்த படத்தின் மூலாதாரமான அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதிய  பொன்னியின் செல்வன் நாவல் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களோடு கற்பனையில் உலாவியவர்கள் அந்த கதாபாத்திரங்கள் செல்லுலாய்டு வடிவில் திரையில் உயிர் பெறுவதை காண ஆர்வமுடன் உள்ளனர். இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனில் வரும் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவன் பயணம் மேற்கொண்ட இடங்கள் நிஜத்தில் தற்போது எங்கிருக்கின்றன, எந்த நிலையில் காணப்படுகின்றன என்பதை அலசுவோம்.

கற்பனையும் நிஜமும் சந்திக்கும் இலக்கிய கடலாக பொன்னியின் செல்வன் நாவலை வடிவமைத்த கல்கி, அந்த கடலில் மூழ்கி எடுத்த முத்துதான் வந்தியத்தேவன் கதாபாத்திரம். மாமன்னனாக இல்லாவிட்டாலும் மாவீரன் வந்தியத்தேவன்தான் கதாநாயகன் போல் பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும் வலம் வருவார். அந்த நாவலின் முதல் இரண்டு பாகங்கள் வந்தியத்தேவனின் பயணத்தோடுதான் பயணிக்கும்.  காஞ்சிபுரம் தொடங்கி இலங்கைவரையிலான அந்த பயணத்தில் சுந்தர சோழனின் மகள் குந்தவையிடம் ஒரு செய்தியையும், பிற்காலத்தில் ராஜராஜசோழன் என அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மனிடம் ஒரு செய்தியையும் தெரிவிப்பார். இந்த காலத்தில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ஒரு விநாடியில் எல்லாம் முடிந்துவிடும். ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு  ரகசியமாக ஒரு செய்தியை கொண்டு செல்வதற்கு வந்தியத்தேவன் நிகழ்த்தியது போன்ற ஒரு நீண்ட நெடிய சாகச பயணம் தேவைப்பட்டிருக்கும். அவரது அந்த பயணத்தில் உள்ள கற்பனை சுவாரஸ்யங்களை நாவலில் படித்து நாம் லயிக்கலாம். அதே நேரம் அந்த பயணத்தில் உள்ள நிஜத்தை நினைவுபடுத்தும் வகையில் தற்போதும் காணப்படும் தொல்லியல் எச்சங்களை நேரில் சென்றும் நாம் ரசிக்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வந்தியத் தேவனின் இந்த பயணம் இரண்டு கட்டங்களைக் கொண்டது,  தஞ்சையை ஆண்ட சுந்தர சோழன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகனான ஆதித்யகரிகாலன் காஞ்சிபுரத்தில் தன்னிடம் தெரிவித்த செய்தியை சோழர்களின் பழைய தலைநகரான  பழையறையில் உள்ள ஆதித்யகரிகாலனின் தங்கை குந்தவையிடம் வந்தியத் தேவன் தெரிவிப்பது முதல்கட்டம்.  பழையறையில் குந்தவை நாச்சியார் தெரிவிக்கும் செய்தியை இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனிடம் தெரிவிப்பதற்காக வந்தியத் தேவன் மேற்கொள்வது இரண்டாம் கட்ட பயணம். இந்த பயணங்களில்  அவர் கால்பதிக்கும் முக்கிய இடங்களை நாவலில் வரும் கதாபாத்திரம் போன்று வர்ணித்திருப்பார் கல்கி.  வந்தியத் தேவனின் பயணத்தின் முதல்கட்டத்தில் அவர் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தற்காலத்தில் எப்படி அறியப்படுகின்றன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

வீராணம் ஏரி

பொன்னியின் செல்வன் நாவலின் முதல் பாகமான புது வெள்ளத்தின் முதல் அத்யாயம் தொடங்குவதே வீராணம் ஏரியிலிருந்துதான். கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை அருகே அமைந்துள்ள இந்த ஏரியின் உண்மையான பெயர் வீரநாராயண மங்கலம் ஏரி. 10ம் நூற்றாண்டில் ராஜாதித்ய சோழனால் கட்டப்பட்டது இந்த ஏரி. தனது தந்தையான முதலாம் பராந்தக சோழனின் மற்றொரு பெயரான வீரநாராயணனை நினைவுப்படுத்தும்விதமாக வீரநாராயணபுரம் மங்கலம் ஏரி என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தார் ராஜாதித்ய சோழன். அந்த பெயரே வீராணம் ஏரி என பிற்காலத்தில் மருவியது. பல்லவர்களுக்கு எதிரான போருக்காக திருமுனைப்பாடி என்கிற இடத்தில் முகாம் அமைத்து தமது படை வீரர்களுடன் ராஜாதித்ய சோழன் தங்கியிருந்தபோது,  அந்த வீரர்களைக் கொண்டு இந்த ஏரியை கட்டியதாக வரலாற்றில் கூறப்படுகிறது. ஆதித்யகரிகாலன் அளித்த செய்தியுடன் காஞ்சிபுரத்திலிருந்து  குதிரையில் கிளம்பிய வந்தியத்தேவன் தனது பயணக் களைப்பை மறந்து வீராணம் ஏரியின் அழகில் மெய்மறப்பதாக பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி குறிப்பிட்டிருப்பார்.

சோழர்கள் காலத்தில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமும், 7 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக அலைகடல் போல் பரந்துவிரிந்து காணப்பட்ட அந்த ஏரியின் 74 கணவாய்களையும் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து அதன் பிரம்மாண்டத்தை கண்டு வந்தியத்தேவன் வியப்பதாக பொன்னியின் செல்வனின் முதல் அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த ஏரியின் பிரம்மாண்டத்தையும், இயற்கை எழில்கொஞ்சும் அழகையும் எண்ணி வியக்கும் வந்தியத்தேவன், அதனைக் கட்டிய சோழர் குலத்து மன்னர்களின் நட்புரிமை தனக்கு கிடைத்ததை எண்ணி பெருமை அடைவார். மேலும் குந்தவை பிராட்டியார் அடிக்கடி வந்து இளைப்பாறும் இடமாகவும் வீராணம் ஏரி பொன்னியின் செல்வன் நாவலில் காட்டப்பட்டிருக்கும்.  ராமானுஜரையும் இந்த ஏரி வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனாலேயே வீராணம் ஏரியின் 74 கணவாய்களை நினைவூட்டும் விதமாக 74 மடங்களை அவர் நிறுவியதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க வீராணம் ஏரி தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று என்கிற பெருமையையும் பெற்று திகழ்கிறது. தற்போது 1465 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்டதாக கருதப்படும் வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்திலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து சேருகிறது. இந்த ஏரி வந்தியத் தேவன் தனது பயணத்தை தொடங்கிய காஞ்சிபுரத்திலிருந்து 289 கி.மீ தொலைவில் உள்ளது.

வீரநாராயண பெருமாள் கோயில்

வீராணம் ஏரி அருகே காட்டுமன்னார் கோயிலில் அமைந்துள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க தலம். பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் இந்த தலத்திலிருந்துதான் அறிமுகமாகும். வந்தியத்தேவன் முதன்  முதலாக இந்த கோயில் முன்புதான் ஆழ்வார்க்கடியான் நம்பியை சந்திப்பார். ஆழ்வார்க்கடியான் நம்பியுடன் சென்று இந்த கோயிலுக்குள் சென்று வழிபடும் வந்தியத் தேவன் அவர் ஆண்டாள் பாசுரங்களை பாடும் விதத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போவார்.

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் நாலாயிரம் திவ்யபிரபந்தம் முதல் முதலாக இசையோடு பாடப்பெற்ற தலம் என்கிற பெருமைக்குரியது. நாலாயிரம் திவ்பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள் அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த காட்டுமன்னார் கோயிலுக்கு உண்டு. வந்தியத்தேவனுடன் கோயிலுக்கு வந்திருந்த ஆழ்வார்க்கடியான் ஆண்டாள் பாசுரத்தைப்பாடுவதைக் கேட்ட பின்புதான் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை தொகுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இளம் நாதமுனிகளின் மனதில் தோன்றியதாக கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிட்டிருப்பார். வீராணம் ஏரியை உருவாக்கிய ராஜாதித்ய சோழன் அந்த ஏரியை சுற்றி ஒரு ஊரை நிர்மாணித்தார். அந்த ஊருக்கு தனது தந்தை முதலாம் பராந்தக சோழன் பெயரில் விஜயநாராயணபுரம் என பெயரிட்டார். அதுவே பிற்காலத்தில் காட்டுமன்னார்கோயில் என மாறியதாக வரலாறு கூறுகிறது.

கடம்பூர் மாளிகை

பொன்னியின் செல்வன் கதையில் திடீர் திருப்பங்கள் நிகழும் இடம்தான் கடம்பூர் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை. ஆதித்ய கரிகால சோழனை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்ட இடமாகவும், அவர் கொல்லப்பட்ட இடமாகவும் இந்த மாளிகை பொன்னியின் செல்வன் நாவலில் காட்டப்படுகிறது. தனது பயணத்தில் வீராணம் ஏரி, காட்டுமன்னார் கோயில் ஆகிவற்றை கடந்து வந்தியத்தேவன் வந்து சேரும் இடம்தான் இந்த கடம்பூர் மாளிகை. காட்டுமன்னார் கோயிலிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கடம்பூர் என்கிற இடத்தில்தான் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை அமைந்திருந்தாக கூறப்படுகிறது.

ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப்போல் கடம்பூர் மாளிகையின் வாசல் அமைந்திருந்ததாக கல்கியால் வர்ணிக்கப்பட்ட அந்த இடத்தில் தற்போது ஸ்ரீருத்ரபதி கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த கோயிலின் கருவறை அருகே ரகசிய சுரங்கப்பாதை ஒன்று காணப்படுகிறது. தற்போது அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அந்த சுரங்கப்பாதை, ஆதித்யகரிகாலன் கொலையுண்ட பிறகு அது குறித்து ரகசிய விசாரணை நடத்த கடம்பூர் மாளிகைக்கு வந்த அருள்மொழி வர்மன் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. ரகசிய விசாரணை நடத்தும் நேரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்வதற்கு அருள்மொழிவர்மனால் இந்த பாதை பயன்படுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கடம்பூர் மாளிகை இருந்த இடத்தின் தற்போதைய நிலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேலக்கடம்பூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயமும் பொன்னியின் செல்வன் நாவலோடு தொடர்புடைய தலமாகும்.

கொள்ளிடம் ஆறு

பொன்னி நதி என அழைக்கப்பட்ட காவிரி, அதன் கிளையாறுகளான கொள்ளிடம், அரிசிலாறு ஆகியவை முற்காலத்தில் எந்த அளவிற்கு பரந்துவிரிந்து காணப்பட்டது என்பதை  பொன்னியின் செல்வனின் நாவலில் இலக்கிய நயத்தோடு விளக்கியுள்ளார் கல்கி. வந்தியத்தேவன் கொள்ளிடம் ஆற்றில் படகில் பயணிக்கும் காட்சிகளையும், அரிசிலாற்றில் குந்தவை தமது தோழிகளுடன் படகில் பயணிக்கும் காட்சிகளையும் கல்கி வர்ணிக்கும் இடம் மிகச் சிறப்பாக இருக்கும். மறுபுறத்தில் இருக்கும் மரங்கள் எல்லாம் சிறிய செடிகளைப்போல் தெரியும் அளவிற்கு கொள்ளிடம் ஆறு சோழர்கள் காலத்தில் பரந்துவிரிந்து காணப்பட்டதாக உவமை கூறி  அதன் பிரம்மாண்டத்தை விவரித்திருப்பார் கல்கி. தற்போதும் இந்த ஆறுகள் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பாய்ந்து டெல்டா மாவட்டங்களை பசுமையாக்குகின்றன.

கும்பகோணம்

தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரமான கும்பகோணம்தான் முற்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டது. மேலக் கடம்பூரிலிருந்து  41 கி.மீ தொலைவில் உள்ள இந்த குடந்தை வந்தியத்தேவனின் பயணத்தில் முக்கியமான ஒரு இடம். இங்குதான் தனது காதலியான அரசிளங்குமரி குந்தவையை முதல் முறையாக சந்திப்பார் வந்தியத்தேவன்.

கடம்பூர் மாளிகையிலிருந்து குதிரைப்பயணம், கொள்ளிடம் ஆற்றில் படகு பயணம் என கடந்து வரும் வந்தியத் தேவன், பின்னர் கும்பகோணத்திற்கு சோதிடரை பார்ப்பதற்காக வரும்போதுதான் அவரது இல்லத்தில் குந்தவையை சந்திப்பார். குடந்தை நகரத்தின் ஆன்மிகச் சிறப்பையும், அங்குள்ள சோதிடர்களின் பெருமையையும் நாவலில் பதிவிட்டுள்ளார் கல்கி. தற்போதும் அந்த பெருமைகளுடன் புகழ்பெற்றுத்திகழ்கிறது கும்பகோணம். இங்குள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயிலும் அங்கு நடைபெறும் மகாமக பெருவிழாவும் உலகப் புகழ்பெற்றது.

திருப்புறம்பியம்

பிற்கால சோழப்பேரரசு நிறுவப்படுவதற்கு  9ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய போர் ஒன்று மூலக்காரணமாக அமைந்தது. அந்த போர் நடைபெற்ற இடம்தான் திருப்புறம்பியம். பல்லவ, சோழ, கங்க அரசர்களின் கூட்டுப்படைகள், பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் படையுடன் மோதிய இந்த போர் தமிழக வரலாறு கண்ட மிகவும் ஆக்ரோஷமான போர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருப்புறம்பியம் போரில் மறைந்த கங்க மன்னன் பிரதிவிபூதியின் நினைவாக சோழ மன்னர் முதலாம் பராந்தக சோழன் பள்ளிப்படை கோயில் ஒன்றை நிறுவினார்.

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த பள்ளிப்படை கோயிலின் தொல்லியல் எச்சங்கள் தற்போதும் திருப்புறம்பியத்தில் காணப்படுகின்றன. சுவர்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. பாண்டிய மன்னர்களின் ஒற்றர்கள் இளவரசர் ஆதித்யகரிகாலனையும் அவரது தம்பி அருள்மொழி வர்மனையும் ஒரே நேரத்தில் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவதை இந்த பள்ளிப்படை கோயில் அருகே அமர்ந்துதான் ஆழ்வார்கடியான் நம்பி ஒட்டுக்கேட்பதாக பொன்னியின் செல்வன் நாவலில் கதை விவரிக்கப்பட்டிருக்கும் கும்பகோணத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த பள்ளிப்படை. திருப்புறம்பியம் போருக்கு பின்னர் அவ்வூரில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட சாட்சிநாதேஸ்வரர் கோயில் தற்போதும் புகழ்பெற்ற சிவதலமாக திகழ்கிறது.

திருவையாறு 

வந்தியத்தேவன் கும்பகோணத்திலிருந்து காவிரி கரையோறம் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் திருவையாறு வருகிறார். சோழ நாட்டின் செழுமையும், பெருமையும் அவரது மனதில் மேலோங்கும் அளவிற்கு திருவையாறின் அழகு மிளிர்ந்ததாக பொன்னியின் செல்வனில் வர்ணித்திருப்பார் நாவலாசிரியர் கல்கி. திருஞானசம்பந்தர் தேவாராத்தில் திருவையாறு குறித்து அளித்த வர்ணணையை தத்ரூபமாக நேரில் பார்த்த மகிழ்ச்சியில் வந்தியத் தேவன் திழைத்ததாக நாவலில் அவர் கூறியுள்ளார்.

திருவையாற்றில் காவிரி கரையோரம் அமைந்துள்ள ஐயாறப்பர் கோயில் தேவாரம் பாடல்பெற்ற சிவ தலங்களில் ஒன்று. திருவையாறு வந்ததும் இந்த கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்று விரும்பினான் வந்தியத் தேவன். அந்த ஐயாறப்பர் கோயில் தற்போதும் பிரசித்திபெற்று திகழ்கிறது. மேலும் வந்தியத் தேவன் இங்கிருந்து ராஜபாட்டையில் தஞ்சாவூர் செல்லும் வழியில்தான் பொன்னியின் செல்வனின் முக்கியக் கதாபாத்திரமான நந்தினியை சந்திப்பார்.

தஞ்சாவூர் அரண்மனை

வந்தியத்தேவனின் பயணத்தின் முக்கியப் நிகழ்வுகள் திருவையாறிருந்து 33 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சையில்தான் நிகழும். உறையூர், பழையாறையை அடுத்து சோழர்களின் புதிய தலைநகரமாக விளங்கிய இந்த தஞ்சாவூர் 164 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது.  சோழர்கள் காலத்தில் இந்த நகரம் கோட்டைகளாலும், மாட மாளிகைகளாலும் எவ்வாறு சூழப்பட்டிருந்தது என பொன்னியின் செல்வன் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் தொடங்கிய தனது பயணத்தில் பல்வேறு சிரமங்களை கடந்து தஞ்சை வந்து சேரும் வந்தியத் தேவன் அங்கும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார். மன்னர் சுந்தரசோழரை சந்திப்பதற்கு பழுவேட்டரையர்களால் ஏற்படும் இடையூறுகளை தனது  மதிநுட்பத்தால் முறியடித்து மன்னரை காணும் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் தன்னிடம் அளித்த முதலாவது ஓலையை அளிப்பார். இந்த அரண்மனை தற்போது எங்கே இருக்கிறது என்பதில் பல்வேறு விதமான வரலாற்று தகவல்கள் கூறப்படுகின்றன.  தற்போது காணப்படும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருந்த இடத்திலேயே முன்பு சோழர்கள் ஆண்ட அரண்மனை இருந்ததாகவும் ஒரு கருத்தும் நிலவுகிறது. எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. தஞ்சையில் சோழ மன்னர்களின் அரண்மனை குறித்து தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

பழையாறை

கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழையாறை நகரம் தஞ்சாவூருக்கு முன்பு சோழர்களின் தலைநகராக விளங்கியது. புதிய தலைநகரான தஞ்சையில் மன்னர் சுந்தரசோழன் வசித்தாலும் அவரது மகள் குந்தவை தனது தோழிகளுடன் பழையாறை நகரத்திலேயே வசித்து வந்தார். தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப்போல் பழையாறை நகரம் காணப்பட்டதாக பொன்னியின் செல்வன் நாவலில் இலக்கிய நயத்துடன் கல்கி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அபாயங்களை கடந்து பழையாறைக்கு வந்து சேரும் வந்தியத்தேவன் அங்கு அரசிளங்குமரி குந்தவையை சந்தித்து ஆதித்ய கரிகாலன் தம்மிடம் அளித்த இரண்டாவது ஓலையை அளிப்பார். பொன்னியின் செல்வனின் கதையோட்டத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள இந்த பழையாறை நகரம் தற்போது பிரபலமான ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தற்போது நாதன் கோயில் என்று அழைக்கப்படும் வைணவத்தலத்திற்கு நந்திபுரா விண்ணகரக் கோயில் என்கிற பெயரும் உண்டு. இந்த கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டங்களில் செம்பியன் மகாதேவி, குந்தவை பிராட்டியார், ஆழ்வார்கடியார் நம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக பொன்னியின் செல்வன் விவரிக்கிறது. கீழ்பழையாறையில் உள்ள  சோமேஸ்வரர் ஆலயமும் வந்தியத் தேவன் பயணித்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

பழையாறையில் இருந்த சோழர்களின் அரண்மனையில்தான் குந்தவை தங்கியிருந்தார். ஆனால் அந்த அரண்மனை அமைந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் தென்படாததால் அரண்மனை குறிப்பாக எங்கிருந்தது என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த அரண்மனைக்குச் சென்று குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் அளித்த இரண்டாவது ஓலையை அவரிடம் அளிப்பார். இந்த அளவோடு வந்தியத்தேவனின் முதல் கட்ட பயணம் முடிகிறது. குந்தவை தெரிவித்த செய்தியை இலங்கையில் உள்ள அவரது தம்பி அருள்மொழி வர்மனிடம் வந்தியத் தேவன் கொண்டு சேர்ப்பது அவரது இரண்டாம் கட்ட பயணம். வல்லவரையன் வந்தியதேவன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல்களை அடுத்தக்கட்டுரையில் பார்ப்போம்.

இரண்டாவது கட்டுரைக்கு இதை கிளிக் செய்யவும் : https://news7tamil.live/vandhiyadevan-travel-in-poniyinselvan-part2.html

 

எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை

G SaravanaKumar

உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

EZHILARASAN D

கேஸ் சிலிண்டர் விலையுயர்வு; ராகுல் காந்தி கண்டனம்

Halley Karthik