நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்- வைத்திலிங்கம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற விவகாரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையேயான…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற விவகாரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையேயான மனக் கசப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றை தலைமையை விரும்பும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி அதனை நிலைநாட்ட தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிர சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை தாங்கள் நாடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளதாகக் கூறினார். நீதிமன்ற தீர்ப்பை தாங்கள் ஏற்போம் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வைத்திலிங்கம் கூறினார். இதுவே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் விருப்பம் என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.