டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாரா லாலு பிரசாத்?

பிகாரின் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத், உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்…

பிகாரின் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத், உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 4ம் தேதி பாட்னாவில் உள்ள தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து விழுந்ததில் வலது கை தோல்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாட்னாவில் உள்ள பரஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவனையில் சிகிச்சையில் உள்ள லாலு பிரசாத் யாதவை, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம், பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ்-க்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

லாலு பிரசாத் யாதவை பார்த்துவிட்டு வெளியே வந்த மங்கல் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, லாலு பிரசாத் யாதவ் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க டெல்லி கொண்டு செல்வது குறித்து அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை நிர்வாகமும் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து லாலு பிரசாத் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த மே 25ம் தேதி அவர் டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.