முருகப்பெருமானின் அவதார நாளாக சொல்லப்படும் வைகாசி விசாகமான இன்று திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர்.
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் முருகன் அவதரித்த இந்த வைகாசி விசாக நாளில் உலகமெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் என அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு காலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் அதிகாலை ஒரு மணி முதல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தலையா, கடல் அலையா என்பது போன்று மக்கள் வெள்ளம் காணப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டள்ளது. இருந்த போதிலும் சர்ப்பக் காவடி எடுத்து வர பக்தர்களக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அறுபடை வீடுகளில் முதல் வீடாக உள்ள மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இந்தாண்டு தளர்வு அளிக்கப்பட்டதால், பக்தர்கள் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டனர். மேலும் விரதம் இருந்து தங்கள் நேர்த்திகடனையும் செலுத்தினர்.
ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் பார்க்க நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலை பின் தொடருங்கள். கோயில்களில் நடபெறும் பூஜைகளையும், வழிபாடுகளையும் நேரலை செய்வதை பக்தர்கள் கண்டு மகிழுங்கள்.
– இரா.நம்பிராஜன்